டோரதி எந்தமாதிரியான படம் ? – கார்த்திக் சுப்புராஜ் பேட்டி
கார்த்திக் சுப்புராஜ் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் படம் டோரதி.மதுரையைக் களமாக வைத்து உருவாகும் இப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்திருக்கிறார்.நடிகர்கள் சனந்த்,ரிஷிகாந்த் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் கதையை கார்த்திக் சுப்புராஜ் மற்றும் சரவணன் சந்திரன் எழுத,திரு ஒளிப்பதிவு செய்ய,கணேஷ் சிவா படத்தொகுப்பு செய்கிறார்.
இந்தப்படத்துக்கு இசை இளையராஜா.
ஷிக்யா எண்டர்டெயின்மெண்ட், தம்மம் பிலிம்ஸ், ஜியோ ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் குனித் மோங்கா கபூர், அச்சின் ஜெயின், ஜோதி தேஷ்பாண்டே ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
செப்டம்பர் 11 ஆம் தேதி டொரொண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படவிருக்கும் ‘டோரதி’ செப்டம்பர் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில் படம் குறித்து சனந்த்,ரிஷிகாந்த் மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் பேசினர்.
நடிகர் சனந்த்,எனக்கு,ரிஷிகாந்த் மற்றும் கார்த்திக் அண்ணன் மூன்று பேருக்கும் இந்தப்படம் மிக முக்கியமான படம்.எனவே,படம் வெளியான பிறகு படம் பற்றிச் பேசினால் நன்றாக இருக்கும் என்றார்.
நடிகர் ரிஷிகாந்த்,கார்த்திக் சுப்புராஜ் அண்ணன் படத்தில் நடித்தது கற்பனை கூட செய்து பார்க்க முடியாதது போல் இருக்கிறது. அதிலும்,இளையராஜா சார் இசையில் அவரது பாடலுக்கு நடித்தது பிரமிப்பு.எனக்கு என்ன நடக்கிறது? என்று யோசிக்குமளவுக்கு இருக்கிறது என்றார்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் விரிவாகப் பேசினார்.அவர் கூறியதாவது….
இந்தப்படம் எனக்கு ரொம்பவே பர்சனலான படம்.இந்தக்கதையை படமாக எடுக்கவேண்டும் என்று பல வருடங்களுக்கு முன்பே முடிவு செய்துவிட்டேன்.இந்தக்கதையை எழுதிவிட்டு எழுத்தாளர் சரவணன் சந்திரனிடம் கொடுத்து கூடுதல்கதை எழுதச் சொன்னேன்.பிறகு நானே 6 முதல் 7 வடிவங்களில் திரைக்கதை எழுதினேன்.
மதுரை சார்ந்த கதை,மதுரையில் நான் வாழ்ந்த வாழ்வியல்,நான் பார்த்த மனிதர்களை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட கற்பனைக்கதை.சிறுவயதிலிருந்தே நண்பர்களாக இருக்கும் இரண்டு இளைஞர்கள்.அவர்கள் வாழ்க்கையில் வரும் ஒரு பெண்.அதன்பின் அவர்கள் வாழ்க்கை என்னவானது? என்பதுதான் கதை.
இந்தப்படத்தை எப்போதே செய்திருக்க வேண்டியது.கதை முடிவானதும் படம் தொடங்கும் நேரத்தில்’மகான்’ பண்ண வேண்டியிருந்தது, அதற்காகத் தள்ளிவைத்தேன்.அந்தப்படம் முடிந்த பிறகு ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’,அதன் பிறகு சூர்யா சாரை சந்தித்து ‘ரெட்ரோ’ தொடங்க வேண்டியிருந்தது.
இப்படியே போனால், எப்போதும் பண்ண முடியாமல் போய்விடும் என்று புரிந்துவிட்டது.அதனால்,உடனே தொடங்கிவிட்டேன்.
கதை எழுதும்போதே,புதுமுகங்கள் அல்லது வளர்ந்து வரும் நடிகர்களைத்தான் நடிக்க வைக்கவேண்டும் என்று முடிவு செய்துவிட்டோம். இரண்டு கதாபாத்திரங்களில் ஒன்றில் சனந்த் நடிப்பதென உடனே முடிவாகி விட்டது.அவரை தயாராக இருக்கச்சொன்னேன்.அவரும் இருந்தார்.ஆனால்,மற்றொரு கதாபாத்திரத்திற்கு நடிகர் தேர்வு செய்யப்படாமல் இருந்ததால் புதுமுகத்தைத் தேர்வு செய்து நடிக்கவைக்க வேண்டும் என்று நினைத்தேன்.அதற்காக பலரைப் பார்த்தோம்.அப்போது ரிஷிகாந்த் வந்தார்.அவரைப் பார்த்து அனைவரும் நன்றாக இருப்பதாகச் சொன்னார்கள்.அப்படித்தான் அவர் மற்றொரு கதாபாத்திரத்திற்குத் தேர்வானர்.இப்போது இவர்கள் இரண்டு பேரின் நடிப்பையும் பார்த்தால்,இந்தக் கதாபாத்திரங்களுக்கு இவர்களைத் தவிர வேறு யாரும் பொருத்தமாக இருக்கமாட்டார்கள் எனத்தோன்றுகிறது.
படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டாகியிருக்கிறது.இது இளையராஜா சாரின் மேஜிக்.இந்தக்கதைக்கு அவர்தான் இசையமைக்க வேண்டும் என்று நான் முன்பே முடிவு செய்தேன்.ஆனால் அவரிடம் கேட்கத் தயக்கமாக இருந்தது. என்னுடைய முந்தைய படங்களுக்கும் அவருடன் பணியாற்ற விரும்பினேன்.ஆனால் ஏதோ ஒரு தயக்கத்தால் அவரைச் சந்திக்கவில்லை.இந்தக்கதையை தயாரிப்பாளர்களுக்கு அனுப்பும்போதே இசை ராஜா சார்தான் என்று போட்டு அனுப்புவேன். படப்பிடிப்பை விரைவாக முடிக்கவேண்டும் என்பதால் இசையமைப்பாளர் பற்றி யோசிக்காமல் படப்பிடிப்புக்குச் சென்றுவிட்டேன். படத்தை முடித்துப் பார்த்த பிறகு,இதை ராஜா சாரிடம் காட்டவேண்டும் என்று முடிவு செய்தேன்.அதன்படி படத்தைக் காட்டினேன். அவர் பார்த்தவுடன் பணியைர்க் தொடங்கி விடலாம் என்றார்.அப்படித்தான் ராஜா சாருடன் என் பயணம் தொடங்கியது.அவருடன் இணைந்து பணியாற்றியது பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.கலையை அவரைப் போல் யாராலும் நேசிக்கமுடியாது.பேஷன் என்ற வார்த்தைக்கு சரியான நபர் அவர்தான்.
இதுவரை தமிழ்த்திரையுலகில் யாரும் செய்திராத புதியமுயற்சியாக,‘டோரதி’ படத்தின் பின்னணி இசைத்தொகுப்பை படம் வெளியாவதற்கு முன்பாகவே வெளியிடவுள்ளோம்.இதற்காக வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி சென்னையில் நடக்கும் இசைநிகழ்ச்சியில் படத்தின் ஒரிஜினல் சவுண்ட் ட்ராக்கை (OST) வெளியிடுகிறோம்.
இளையராஜா சார் படம் பார்த்து முடித்த உடனே,இந்தப்படத்தின் ஒரிஜினல் சவுண்ட் ட்ராக் அதாவது பின்னணி இசைத் தொகுப்பை,படம் வெளியாவதற்கு முன்பாகவே வெளியிடலாம்.பாடல்கள் வெளியீட்டை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள்.ஆனால் சவுண்ட் ட்ராக்கை நேரடியாக வெளியிடலாம் என்று கூறினார்.அப்படித்தான் இந்த ஒரிஜினல் சவுண்ட் ட்ராக் வெளியீட்டு ஐடியா உருவானது.
இது,மொத்தம் 40 நிமிடங்கள் ஒலிக்கக்கூடியதாக இருக்கும்.சிம்பொனி போல் படத்தின் பின்னணி இசையை ராஜா சார் நேரடியாக இசைக்கவிருக்கிறார்.இதை ஒரு படத்தின் நிகழ்ச்சியாகப் பார்க்காமல்,ராஜா சாரின் இசையை அனுபவிக்கும்,அதில் பயணிக்கும் இரசிகர்களாக அனைவரும் பங்கேற்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்.
இப்படம்,டொரொண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்கிறது.இந்தக்கதையை எழுதி முடித்தவுடனேயே சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடவேண்டும் என்று முடிவு செய்தேன்.பிக் 5 என்று சொல்வார்கள்,உலகளவில் 5 மிக முக்கியமான சர்வதேச திரைப்பட விழாக்கள் இருக்கின்றன.அவற்றிலொன்றில் நம்முடைய படம் திரையிட வேண்டும் என்று நினைத்தேன்.இது எனக்கு முதல் அனுபவம். என்னுடைய படங்கள் வெளியீட்டுக்கு முன்பாக சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிட்டதில்லை.ஆனால்,படத்தின் தயாரிப்பாளர்களுக்கு இதில் நிறைய அனுபவம் இருக்கிறது.அவர்கள் ஆஸ்கார் விருது வாங்கியிருக்கிறார்கள்.அவர்களது முயற்சியின் மூலம் டொரொண்டோ சர்வதேச திரைப்பட விழாக் குழுவினருக்கு படத்தை அனுப்பி வைத்தோம்.அவர்கள் படத்தைப் பார்த்ததும்,உலக பிரீமியரில் திரையிட தேர்வு செய்துவிட்டார்கள்.
திரைப்பட விழாவில் பங்கேற்பதால் இது திரைப்பட விழாவுக்கான படம் என்று நினைக்கவேண்டாம்.நம்ம மக்களுக்கு ஏற்ற,அனைத்து அம்சங்களும்,திரையரங்க கொண்டாட்டங்கள்,பாடல்கள் நிறைந்த படமாக இருக்கும்.அதே சமயம்,நம்ம கலாச்சாரம்,நம்ம வாழ்வியலை உலகளவில் எடுத்துச்செல்லும் ஒரு படமாகவும் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.












