7 ஸ்டார் பாய்ஸ் – திரைப்பட விமர்சனம்
கால்பந்து விளையாட்டில் ஆர்வம் உள்ள கிராமத்துச் சிறுவர்கள்,கால்பந்துப் போட்டியொன்றில் கலந்துகொண்டு வெற்றிபெற முனைகிறார்கள்.அவர்களை அந்தப்பாதைக்கு அழைத்துச் சென்ற நாயகன்,எதிர்ப்புகளை மீறி நாயகியைக் கைப்பற்ற முயல்கிறார்.இவ்விரு முயற்சிகளும் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை சுவையாகச் சொல்லியிருக்கும் படம் 7 ஸ்டார் பாய்ஸ்.
நாயகனாக நடித்திருக்கும் ஆண்டனிவர்கீஸ்,ஒரு பக்கம் சிறுவர்களுக்கு உற்சாகமூட்டி அவர்களுக்கு உந்துதல் அளிப்பது,இன்னொரு பக்கம் நாயகியைக் கரம்பிடிக்கப் போராடுவது என்கிற வேடமேற்று அதற்குப் பொருத்தமாக நடிக்க விழைந்திருக்கிறார்.
நாயகியாக வரும் ஜுமானா அப்து ரகுமான்,படத்தில் நிறைய இல்லாவிட்டாலும் வருகிற காட்சிகளில் நிறைவாக இருக்கிறார்.அவருடைய கண்கள் அவருக்குப் பெரும்பலம்.
உமராக நடித்திருக்கும் சிறுவன் தனிஷ் பி.கே,குஞ்சுவாக வரும் சிறுவன் அமல்,பர்ஹான் என்ற பெயரில் வரும் சிறுவன் பாசித் உள்ளிட்டோர் படத்துக்குப் பெரும்பலமாக இருக்கிறார்கள்.அவர்களின் எதார்த்தமான சுட்டித்தனமான நடிப்பு இரசிக்க வைக்கிறது.
நிஜ கால்பந்தாட்ட வீரரான ஐஎம்.விஜயன்,சிறுவர்களுக்குக் கால்பந்துப் பயிற்சி கொடுக்கும் வேடத்தில் நடித்திருக்கிறார்.அவரால் அந்த வேடம் உண்மைக்கு நெருக்கமாக அமைந்திருக்கிறது.
ஃபைஸ் சித்திக் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.விளையாட்டுக் களம்,கிராமத்துக்களம்,காதல் களம் ஆகிய எல்லாக் களங்களிலும் தன் இருப்பை அழுத்தமாகப் பதிவு செய்து நல்ல காட்சியனுபவம் கொடுத்திருக்கிறார்.
பாடல்களிலும் கதைசொல்லும் இயக்குநரின் எண்ணத்துக்கேற்ற பாடல்களைக் கொடுத்து இரசிக்க வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜேக்ஸ்பிஜாய்.பின்னணி இசை காட்சிகளுக்கு உரம் சேர்த்திருக்கிறது.
படத்தைத் தொகுத்திருக்கும் நெளபல் அப்துல்லா,விளையாட்டுப் படங்களை எப்படிக் கொடுக்க வேண்டும் என்று உணர்ந்து உழைத்திருக்கிறார்.அதனால் அங்கங்கே சில தடைகள் இருப்பினும் படம் சுவாரசியமாகப் போகிற உணர்வு ஏற்படுகிறது.
எழுதி இயக்கியிருக்கிறார் நிகில்பிரேம்ராஜ்.கால்பந்தாட்ட வீரர்களும் இரசிக்கும் வண்ணம் எடுத்துக்கொண்ட கதையைப் படமாக்கியிருக்கிறார்.மையக்கதையாகக் கால்பந்தாட்டக் கதையை எடுத்துக்கொண்டாலும் அதற்குள் கிராமத்து மனிதர்கள் கதை மற்றும் திரைப்படங்களுக்கு அவசியத் தேவையான காதல்கதை ஆகியனவற்றைச் சரிவிகிதத்தில் கலந்து திரைக்கதை எழுதியிருக்கிறார்.
எழுத்தைத் திரையில் விரிக்கும் கலைஞர்களும் முக்கியம் என்கிற தேவை கொண்ட இந்தக்கதைக்குப் பொருத்தமாக சிறுவர்கள் மற்றும் ஐஎம்.விஜயன் போன்றோர் அமைந்திருக்கிறார்கள்.இவற்றால் இயக்குநரின் எண்ணம் ஈடேறியிருக்கிறது.
சிறுவர்களும் இளைஞர்களும் பார்த்து இரசித்து,சொல்லப்பட்டிருக்கும் உந்துதல் கருத்துகளை ஏற்று நடக்கவேண்டிய படம்.
– இளவரசன்












