விமர்சனம்

ஒன்ஸ்மோர் – திரைப்பட விமர்சனம்

இறுக்கமான முகத்துடன் கவலை தோய்ந்த கண்களுடன் நடைப்பிணம் போல் நடமாடிக்கொண்டிருக்கும் நாயகன் அர்ஜுன்தாஸ் வாழ்க்கையில் அவரை நேசிக்கும் ஒரு காதலி வருகிறார்.

தொடக்கத்தில் மறுத்து பின்பு அந்தக்காதலை ஏற்கிறார் அர்ஜுன்தாஸ்.எனவே,திருமணம் வரை போகிறார்கள்.திருமண நிகழ்வுகளின் போது ஒரு சிக்கல் வருகிறது நாயகனுக்கு? அது என்ன? அதன் முடிவென்ன? ஆகிய கேள்விகளுக்கான விடைகள்தாம் படம்.

ரகுவரன் எனும் கதாபாத்திரம் ஏற்றிருக்கும் அர்ஜுன் தாஸுக்கு ஏற்ற வேடம்.மிக இயல்பாக நடித்திருக்கிறார்.துறுதுறுப்பான காதலிக்கு ஈடுகொடுக்கும் காட்சிகளில் புதிய அர்ஜுன்தாஸை பார்க்கமுடிகிறது.

அர்ஜுன்தாஸின் காதலியாக அஞ்சலி எனும் வேடமேற்றிருக்கும் அதிதி சங்கர்,துள்ளலும் துடிப்புமாக நடித்து படத்துக்கே கலகலப்பூட்டியிருக்கிறார்.திருமண நேரத்தில் வரும் எதிர்பாரா சிக்கல் நேரத்தில் அவர் நடிப்பு சிறப்பு.

இன்னொரு நாயகியாக நடித்திருக்கும் சோனா ஒலிக்கல் கதாபாத்திரம் காதலின் பரிமாணங்களைச் சொல்வதற்காக படைக்கப்பட்டிருக்கிறது.அதற்குப் பொருத்தமாக நடித்திருக்கிறார்.

டிராவிட் செல்வம்,அனுஷா பிரபு,ஜகபர்,மோனிஷ் எலமாரன்,தேவதர்ஷினி,நாயகனின் அப்பா அம்மாவாக நடித்திருக்கும்,தயாளன்,ரமா உட்பட படத்தில் நிறைய நடிகர் நடிகைகள் இருக்கிறார்கள்.அனைவரையும் அளவாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

அரவிந்த் விஸவ்நாதன் ஒளிப்பதிவில் காட்சிகள் அழகு.அதிலும் கேரளப் பின்னணிக் காட்சிகள் கூடுதல் அழகு.அவருடைய ஒளிப்பதிவு காட்சியழகு மட்டுமின்றி,கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் பிரதிபலிக்கும் வண்ணம் அமைந்திருக்கிறது.

ராஜ்கமலின் கலைஇயக்கம் கவனிக்க வைக்கிறது.பல் இடங்களில் இது இயற்கையா செயற்கையா என்பது தெரியாத வண்ணம் வேலை செய்திருக்கிறார்கள்.

படத்தொகுப்பாளர் நாஷ்,இடையிடையே குழம்பிவிட்டார் போலும் அது படத்திலும் தெரிகிறது.படத்தில் சொல்ல விழைந்த அழுத்தமான கருத்து சரியாகக் கடத்தப்படவில்லையோ? என்றெண்ணும்படி இருக்கிறது.

ஹேஷாம் அப்துல் வகாப் இசையில் படத்தின் இயக்குநர் விக்னேஷ்ஶ்ரீகாந்த் வரிகளில் பாடல்கள் இரசிக்கும்படி அமைந்திருக்கின்றன.பின்னணி இசை மிக முக்கியம் என்பதை உணர்ந்து இசைத்திருக்கிறார்.

விக்னேஷ் ஸ்ரீகாந்த் எழுதி இயக்கியிருக்கிறார்.மேலோட்டமாகப் பார்த்தால் முக்கோணக் காதல்கதையாகத் தெரியும்.அதற்குள் காதலின் சில நுட்பமான பக்கங்கள் பற்றிப பேசியிருக்கிறார்.அவற்றைக் கோர்வையாகச் சொல்லிச் செல்வதில் தடுமாறியிருக்கிறார்.அதனால் படம் ஒரே சீராகப் போகாமல் அங்கங்கே தொய்வடைகிறது.

அதேநேரம் காதல் மற்றும் காதலர்கள் குறித்த இயக்குநரின் சிந்தனைக்கு,அவருடைய எழுத்துக்கு உயிர்கொடுக்கும் வகையில் அர்ஜுன்தாஸும் அதிதிசங்கரும் நடித்திருப்பது படத்துக்குப பலம்.

– கதிரோன்

Related Posts