செய்திக் குறிப்புகள்

மிஸ்டர் பாரத் நாகரிகமான நகைச்சுவைப்படம் – படக்குழு உறுதி

பாரத் மற்றும் நிரஞ்சன் ஆகிய இருவரும் நன்கு அறியப்பட்ட யூடியூபர்கள்.இவர்கள்,’மிஸ்டர் பாரத்’என்கிற முழுநீளத் திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

நிரஞ்சன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் பாரத்,சம்யுக்தா விஸ்வநாதன்,பால சரவணன்,நிதி பிரதீப்,ஆர்.சுந்தர்ராஜன்,லிங்கா,ஆதித்யாகதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஒளிப்பதிவி ஓம் நாராயண்,படத்தொகுப்பு திவாகர் டென்னிஸ்,இசை பிரணவ் முனிராஜ்,கலை இயக்கம் பாவ்னா கோவர்தன்.உடை வடிவமைப்பு நவதேவி ராஜ்குமார்,சுரேன் ஜி மற்றும் அழகியகூத்தன் ஒலியமைப்பு,நடன இயக்கம் அசார்,சண்டைப்பயிற்சி அம்ரின் அபுபக்கர்.

இப்படம்,இயக்குநர் லோகேஷ் கனகராஜின் கி ஸ்குவாட்,பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் தி ரூட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கின்றன.

விரைவில் வெளியாகவிருக்கும் இப்படம் குறித்து நாயகன் பாரத் கூறியதாவது….

நானும் இயக்குநர் நிரஞ்சனும் கல்லூரிக் காலத்திலிருந்தே நண்பர்கள்.அப்போதே இருவரும் சேர்ந்து குறும்படங்கள் எடுத்திருக்கிறோம். இந்தப்படத்தில் இப்படி ஒரு கதாபாத்திரம் என்று நிரஞ்சன் சொல்லும்போதே மிக ஆர்வமாக இருந்தது.ரொம்பவே புதிதாகவும் இருந்தது. இந்தப்படத்தில் நான் ஹீரோவாக அறிமுகமாவது மகிழ்ச்சி.படம் நிச்சயம் குடும்பமாக பார்க்கக்கூடிய படமாக இருக்கும்.இந்தப்படத்தில்,நான் உட்பட 6 பேர் அறிமுகமாகிறார்கள்.அறிமுக நடிகர்கள் படமென்றாலும்,நல்லகதை இருந்தால் அந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெறுகிறது.அப்படிப்பட்ட படம்தான் ‘மிஸ்டர்.பாரத்’.எந்த ஒரு இடத்திலும்,எந்தவிதமான தவறான காட்சிகளும் இல்லை.குடும்பத்தோடு மகிழ்ச்சியாக பார்க்கக்கூடிய சிறந்த திரையரங்க அனுபவத்தைக் கொடுக்கும் ஒரு படமாக இருக்கும் என்றார்.

இயக்குநர் நிரஞ்சன் கூறியதாவது….

காதலித்துத்தான் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று ஆசைப்படுகிறார் நாயகன்.ஆனால் அவருக்கு பெண்களிடம் தன் காதலை சரியான முறையில் வெளிப்படுத்த முடியவில்லை.அதுமட்டுமல்ல,பெண்களே முன்வந்து அவரிடம் காதல் சொல்ல முயன்றாலும் அதைப் புரிந்துகொள்ள அவரால் முடிவதில்லை.இப்படிப்பட்ட ஒருவர் வாழ்வில் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதுதான் மையக்கதை. இந்தக் கதையில் நாயகன்,ஒரு ஜாலியான,எந்தவிசயத்திற்கும் பெரிதாக அலட்டிக் கொள்ளாத ஒருவராக இருப்பார்.அவரை மற்றவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? அவர் மற்றவர்களிடம் எப்படி நடந்துகொள்கிறார்? என்பனவற்றை முழுக்க முழுக்க நகைச்சுவையாகச் சொல்லியிருக்கிறோம்.
இளைஞர்களை மையப்படுத்திய படமென்றாலும்,படத்தில் புகை பிடிப்பது,மது அருந்துவது போன்ற எந்தக்காட்சிகளும் இல்லை. சிறியவர்கள்,பெரியவர்கள் என அனைத்துத் தரப்பினரும் பார்க்கும்படி படம் ஜாலியாக இருக்கும்.படம் பார்த்த பிறகு உங்களுக்கு அது தெரியும்.படத்திற்கு யு சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள்.எந்தவிதமான வெட்டும் கொடுக்காமல் யு சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள்

இவ்வாறு அவர் கூறினார்.

Related Posts