வெங்கட்பிரபு சிவகார்த்திகேயன் கூட்டணி நிரந்தர முறிவு
இவ்வாண்டு தைப் பொங்கலையொட்டி வெளியான பராசக்தி படத்துக்கு அடுத்து சிவகார்த்திகேயன்,இரண்டு படங்களில் நடிக்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது.
அவற்றிலொன்று,டான் பட இயக்குநர் சிபிச்சக்ரவர்த்தி இயக்கத்தில் ஒருபடம்.அப்படத்தை பேசன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் அப்படத்தின் படப்பிடிப்பு 2025 டிசம்பர் பத்தாம் தேதி தொடங்கும் என்று சொல்லப்பட்டது.அது நடக்கவில்லை.
அதோடு அப்படத்தை இயக்குவதாகச் சொல்லப்பட்ட சிபிச்சக்ரவர்த்தி, ரஜினி நடிக்கும் படத்தை இயக்கப்போய்விட்டார். அதனால் அப்படம் தடைபட்டது.
அதன்பின், சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட படத்தின் படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் கலந்து கொள்வார் என்று சொல்லப்பட்டது.
அப்படத்தின் படப்பிடிப்பை நடத்துவதற்காக சிங்கப்பூர்,மலேசியா ஆகிய நாடுகளில் இடங்கள் தேர்வு செய்துவிட்டு வந்தது இயக்குநர் குழு.
பிப்ரவரி 22 ஆம் தேதி அந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்லப்பட்டது.அதற்கேற்ப வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன என்று சொன்னார்கள்.அதுவும் நடக்கவில்லை.
திட்டமிட்டபடி வெங்கட்பிரபு படம் தொடங்காது என்றும் தாய்க்கிழவி பட இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கவிருக்கும் புதியபடத்தில் நடிக்கப்போகிறார் என்றார்கள்.அந்தப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது என்றும் சொன்னார்கள்.
அதுபோலவே,அந்தப்படத்தின் அறிவிப்பு வெளியாகி கட்ந்த 18 ஆம் தேதி படப்பிடிப்பும் தொடங்கிவிட்டது.
வெங்கட்பிரபு இயக்கும் படம் என்னவாகும்?
அப்படத்தின் மொத்த செலவுத்தொகை உத்தேசமாக சுமார் 180 கோடி ஆகும் என்று படக்குழு சொல்லியிருக்கிறது.வேலைகள் நடக்க நடக்க அது இன்னும் கூடும் என்பதால் அவ்வளவு செலவிட்டு இப்படத்தை எடுக்கவியலாது.எனவே, செலவைக் குறைத்துத் திட்டமிடுங்கள் என்று தயாரிப்பு நிறுவனம் சொல்லியிருக்கிறது.
அதனால்,செலவில் பல திருத்தங்கள் செய்து மறுபடி ஒரு தொகையை இயக்குநர்குழு கொடுத்ததாம்.அவர்கள் சொன்ன தொகை சுமார் 160 கோடி.முந்தைய செலவிலிருந்து சுமார் இருபது கோடி குறைத்திருக்கிறார்கள்.
அதன்பின், படவியாபார சாத்தியங்கள்,வரவுகள் குறித்த கணக்கை படநிறுவனம் போட்டுப் பார்த்திருக்கிறது.எவ்வளவு கணக்குப் போட்டாலும் சுமார் ஐம்பது கோடி நட்டம் ஏற்படும் என்று தெரிந்திருக்கிறது.
அதனால் தயாரிப்பு நிறுவனம்,இவ்வளவு செலவிட்டு இந்தப்படத்தை எடுக்கவியலாது என்று சொல்லிவிட்டதாம்.அதன்காரணமாகவே, இந்தப்படத்தை விட்டுவிட்டு சிவகுமார் முருகேசன் இயக்கும் படத்துக்கு சிவகார்த்திகேயன் சென்றுவிட்டார்.
சிவகுமார் முருகேசன் படம் அதற்கடுத்து ஏற்கெனவே ஒப்புக்கொண்ட ஒரு படம் ஆகியனவற்றை முடித்துவிட்டு வெங்கட்பிரபு படத்துக்கு சிவகார்த்திகேயன் வருவார் என்று சொல்லப்பட்டது.
இப்போது அதிலும் மாற்றம் நடந்துவிட்டதாம்.
சத்யஜோதி நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பது உறுதி.ஆனால்,அந்தப்படத்தை பார்க்கிங் படஇயக்குநர் இராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவிருக்கிறாராம்.சேயோன் திரைப்பட வேலைகள் நிறைவடைந்தபின் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.
இதனால்,வெங்கட்பிரபு சிவகார்த்திகேயன் முற்றாக முறிந்துவிட்டது என்கிறார்கள்.











