நட்டி படத்துக்குத் தடை கோரி விஜய் ஆதரவாளர் வழக்கு – விவரம்
நட்டி கதாநாயகனாக நடித்திருக்கும் படம் டிஎன் 2026. நடிகர் தம்பிராமையா மகன் உமாபதிராமையா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில்,சிருத்தா ராவ்,சாந்தினி தமிழரசன்,யாஷிகா ஆனந்த் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர்.
இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர்,இளவரசு,தம்பி ராமையா ஆகியோர் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.மேலும் ரெடின் கிங்ஸ்லி, லொள்ளு சபா மாறன்,பிக்பாஸ் முத்துக்குமரன்,ஆதித்யா கதிர்,சித்ரா லட்சுமணன்,தலைவாசல் விஜய்,வையாபுரி, வடிவுக்கரசி,விஜி சந்திரசேகர்,ஸ்ரீஜா ரவி,இந்திரஜா ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். சாண்டி சிறப்பு கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார்.
இப்படத்தின் திரைக்கதை இயக்கம் – உமாபதி ராமையா, கதை – தம்பி ராமையா, இசை – தர்புகா சிவா,ஒளிப்பதிவு – பிஜி.முத்தையா, படத்தொகுப்பு – அரள்.ஆர்.தங்கம்கலை – என்.கே.ராகுல், சண்டைப்பயிற்சி – மகேஷ் மேத்யூ,நடனம் – சாண்டி.
கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி ஆகியோர் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
இந்நிலையில்,இப்படத்துக்குத் தடைவிதிக்கக் கோரி பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திரைப்படத்தை தமிழக தேர்தல் முடியும் வரை தடை செய்யவேண்டும் எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் எம்.எல்.ரவி இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்தை வெளியிட அனுமதிக்காதபோது எப்படி இந்தத் திரைப்படத்தை மட்டும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியிட அனுமதிக்கலாம் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தப்படத்தில் நடிகர்நட்டியின் தோற்றம் நடிகர் விஜய்யைப் போல் இருப்பதாகவும் விஜய்யின் அரசியல் பயணத்தைக் கிண்டல் செய்யும் விதமாக இப்படம் இருப்பதாகவும் விஜய் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.
இதற்கு, மேலோட்டமாகக் கிடைக்கும் தகவல்களை வைத்து உடனே முடிவுக்கு வரவேண்டாம்.இந்தப்படம் யாரையும் புண்படுத்தும் வகையில் எடுக்கப்படவில்லை.தம்பி ஆதவ்அர்ஜுனா அதைப் புரிந்துகொள்ள வேண்டும்.யாரையும் சங்கடப்படுத்தும் நோக்கம் இதில் இல்லை.அதை நீங்கள் படம் பார்த்தபிறகு நிச்சயமாகப் புரிந்துகொள்வீர்கள்.மீடியா நண்பர்களிடம் ஒரு சிறியவேண்டுகோள்.பலஆண்டுகளாக எங்களுடைய இந்தமுயற்சி தொடர்ந்து கொண்டிருக்கிறது.இந்தப்படத்தை முழுமையாகப் பார்த்தபிறகு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள் என்று தம்பிராமையா கூறியிருந்தார்.
இந்நிலையில்,எம்.எல்.ரவி இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.இவர் அண்மைக்காலமாக விஜய்க்கு ஆதரவாக மேலும் சில வழக்குகளைத் தொடுத்தவர் என்பதால் விஜய் ஆதரவுடன்தான் இது நடந்திருக்கிறது என்கிறார்கள்.
இந்தவழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று சொல்லப்படுகிறது.











