அரசன் படத்துக்குத் தடை அறம் தவறிவிட்டது – டிஆர் ஆவேசம்
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அரசன் படத்தின் இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு கடந்த புதன்கிழமையன்று திடீரென நிறுத்தப்பட்டது.
அதற்குக் காரணம், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உத்தரவுக்கிணங்க தொழிலாளர்கள் வேலைக்கு வரமறுத்துவிட்டனர் என்று சொல்லப்பட்டது.
இந்தத் தகவல் வெளியானதும் பல்துறை வித்தகர் கலைப்புலி தாணு தயாரிக்கும் படத்துக்கு அப்படி தடைவிதிக்க முடியுமா? அவர் விட்டுவிடுவாரா? என்றெல்லாம் பேசத் தொடங்கினர்.
ஆனால் அப்படித்தான் நடந்திருக்கிறது என்பது இன்று டி.ராஜேந்தர் வெளியிட்ட அறிக்கை மூலம் உறுதியாகியிருக்கிறது.
அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்…
‘அரசன்’ படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது ஏன்? நிறுத்தியது யார்? நிறுத்த சொன்னது யார்? நியாயம் கேட்க வருகிறார் இந்த டி.ஆர்
அரசனுக்காகவோ, சிலம்பரசனுக்காகவோ வாதாடுவதற்காக நான் வரவில்லை.தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும்,அதற்குத் துணையாக நிற்கும் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனமும் அறம்தவறி நடந்துவிடக்கூடாது என்பதை சுட்டிக்காட்டவே நான் வருகின்றேன்.
ஆம் சிலம்பரசன் நடித்த ‘வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தை எடுத்த மரியாதைக்குரிய தயாரிப்பாளர் ஐசரிகணேஷ் அவர்கள்,சிலம்பரசனுக்கு எதிராக அவர் வழக்குமன்றத்துக்குச் சென்றார்.வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கிலே சிலம்பரசன் சார்பாக சட்டப்படி உரிமை பெற்ற,அங்கீகாரம் பெற்ற பிரதிநிதியாக நான் வழக்கு மன்றத்திற்கு சென்று மாண்புமிகு நீதிமன்றத்திற்கு முன் நின்று போராடி முறைப்படி வென்றும் வந்திருக்கின்றோம்.
அந்த வழக்கிலே மாண்புமிகு மரியாதைக்குரிய நீதிமன்றம் வெந்து தணிந்தது காடு படத்தைத் தொடர்ந்து இரண்டாவது படத்துக்குக் கொடுக்கப்பட்ட அட்வான்ஸ் சிலம்பரசனையே போய் சாரும் என்று ஒரு தீர்ப்பையும் வழங்கி இருக்கின்றார்கள். அந்த தீர்ப்புக்கான நகலும் எங்கள் கையிலே இருக்கிறது.
இப்படிப்பட்ட இந்த தருணத்திலே அந்தப் பழைய வழக்கை எடுத்து வைத்துக்கொண்டு நம்முடைய தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கமும்,அதற்குத் துணையாக தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனமும் சேர்ந்து இன்றைக்கு அரசன் படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருக்கிறார்கள் என்ற ஒரு செய்தி வருகிறது.
இதைப்பார்க்கின்றபோது நான் கேட்க விரும்புவது எல்லாம் ஒன்றே ஒன்றுதான்.ஒரு தயாரிப்பாளருக்காக போராடுவதற்காக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனமும் நிற்கின்றபோது,ஒரு திரைப்பட நடிகருக்காக,போராடுவதற்காக தென் இந்திய நடிகர் சங்கமும் ஏன் நிற்கக்கூடாது? நிற்கவேண்டும். அவர்களும் போராட வேண்டும்.உரிமையைப் பெற்றுத் தரவேண்டும். நியாயத்தை நிலைநாட்ட வேண்டும் என்று ஒரு சுமூகமான தீர்வை ஏற்படுத்தி தரவேண்டும் என்ற கோரிக்கை வைக்கின்றேன்.
அதே நேரத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கக்கூடிய இந்த காலகட்டத்திலே நீதிமன்றத்தால் ஒரு வழக்கிலே தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகும், சட்டத்தை எங்கள் கையிலே எடுப்போம். நீதிமன்றத்தால் ஒரு வழக்கிலே தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகும் சட்டத்தை எங்கள் கையிலே எடுப்போம். நாங்கள் நடந்து கொண்டிருக்கக் கூடிய ஒரு படத்தை நிறுத்துவோம் என்று நிறுத்தி காட்டி இருக்கிறார்களே இது நியாயமா? என்று கேள்வி கேட்கவும் விரும்புகின்றேன்.
இது தொடர்பாக விரைவில் பத்திரிகையாளர்களை சந்திக்கவும் இருக்கின்றேன் என்பதையும் இதன்மூலம் தெரியப்படுத்திக் கொள்கின்றேன்.
இப்படிக்கு,
டி.ராஜேந்தர்
இயக்குநர்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.











