சினிமா செய்திகள்

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் துல்கர்?

நடிகர் விஜய் சங்கீதா தம்பதியின் மகன் ஜேசன் சஞ்சய்.2009 ஆம் ஆண்டு வெளியான விஜய் நாயகனாக நடித்த வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலில் விஜய்யுடன் சேர்ந்து நடனமாடியிருந்தார்.அதனால் பிற்காலத்தில் அவர் நடிகராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.அதுபோலவே,அவர் வளர்ந்ததும் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்புகள் வரத் தொடங்கினவாம். ஆனால் அவற்றையெல்லாம் ஜேசன் மறுத்து வந்தார் என்று சொல்லப்பட்டது.

அதேநேரம்,அவருக்குச் சிறு வயது முதலே இயக்குநராகும் ஆசை இருந்துள்ளது.அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார்.

எனவே,கல்லூரிப் படிப்பு முடித்த பிறகு கனடா சென்று திரைப்பட இயக்கம், திரைக்கதை அமைப்பு மற்றும் திரைப்படத் தொழில்நுட்பங்கள் தொடர்பான படிப்புகளைப் படித்து வந்தார் ஜேசன் சஞ்சய். பிறகு ஆங்கிலத்தில் குறும்படங்களையும் இயக்கினார்.

அதைத் தொடர்ந்து திரைப்படம் இயக்குவதற்காக கதை திரைக்கதை எழுதிக் கொண்டு இயக்குநராகும் முயற்சியில் ஈடுபட்டுவந்தார்.

அதன் விளைவாக, ஆகஸ்ட் 28,2023 அன்று லைகா நிறுவனம் வெளியிட்ட ஓர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டது.அதில், நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டிருந்தது.

அதன்பின் அவர் இயக்கும் படம் குறித்த எந்தத் தகவலும் அறிவிக்கப்படவில்லை.

அதேநேரம், அவர் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்கள் என்று ஒரு பட்டியல் உலாவந்து கொண்டிருந்தது. நடிகர் அதர்வா, கவின், துருவ் விக்ரம் ஆகிய மூவரில் ஒருவரை ஜேசன் சஞ்சய் இயக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது.

ஆனால் அதுகுறித்தும் படக்குழு, சம்பந்தப்பட்ட நடிகர்கள் உட்பட யாரும் உறுதிப்படுத்தவில்லை.

இந்நிலையில் இப்போது அப்படம் குறித்து திரையுலக வட்டாரங்களில் ஒரு விசயம் பேசப்படுகிறது.

அதன்படி,ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் தமிழிலும் புகழ்பெற்ற மலையாளநடிகரும் நடிகர் மம்முட்டியின் மகனுமான துல்கர் சல்மான் நடிக்கவிருக்கிறார் என்பதுதான் அந்த விசயம்.

இதுதொடர்பான முதற்கட்டப் பேச்சு நடந்து அது அடுத்தடுத்த நிலைக்குச் சென்று கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

எல்லாம் சரியாக அமைந்தால் விரைவில், ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்கிறார் என்கிற அறிவிப்பு வெளியாகும் என்று சொல்கிறார்கள்.

நடக்கட்டும்.நல்லதுதான்.

Related Posts