விமர்சனம்

தடயம் – இணையத் தொடர் விமர்சனம்

தடயம் என்கிற தலைப்பே இது காவல்துறை விசாரணையை அடிப்படையாகக் கொண்ட தொடர் என்பதைச் சொல்லிவிடுகிறது.தமிழ்நாடு ஆந்திரா எல்லையோர கிராமமொன்றில் நடக்கும் தொடர் கொலைகளும் அவை தொடர்பான விசாரணைகளையும் ஆறு அத்தியாயங்களாகப் பிரித்துக் கொடுத்திருக்கிறார்கள்.

விசாரணை அதிகாரியாக நடித்திருக்கும் சமுத்திரக்கனி,அதற்குத் தக்க அப்படியே இருக்கிறார் என்று தனியாகச் சொல்லவேண்டியதில்லை.மதிநுட்பம் நிறைந்த அந்த கதாபாத்திரத்தை முழுமையாக உள்வாங்கி நடித்திருக்கிறார்.அதனால்,அவருக்கும் தொடருக்கும் நற்பெயர்.

இன்னொரு காவலதிகாரியாகவும் கதையின் நாயகியாகவும் நடித்திருக்கும் ஷிவதா, ஏற்றுக் கொண்ட வேடத்துக்கேற்ற மிடுக்குடன் வலம் வருகிறார்.

புஷ்பா பட புகழ் ராஜ் மற்றும் அவருடைய தம்பியாக ந்டித்திருக்கும் பிரேம் ஆகியோர் எதிர்மறை வேடங்களில் வருகிறார்கள்.அதற்கேற்ற மிரட்டும் நடிப்பை வெளிப்படுத்தி கவனிக்க வைக்கிறார்கள்.

மூணாறு ரமேஷ், சுந்தரபாண்டியன், கொற்றவை, விஷாகன், புலிபாண்டி, அபிஷேக் ஜோசப் ஜார்ஜ், ரவிச்சந்திரன், கார்த்தி, சுபர்னா, தயாளன் என தொடரில் நிறைய நடிகர் நடிகையரைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.அவர்களும் தொடரின் வெற்றிக்குப் பங்களித்திருக்கிறார்கள்.

இன்றைக்கு கால்நூற்றாண்டுக்கு முன்பாக அதாவது 1999 ஆம் ஆண்டு நடப்பது போல் கதை எழுதப்பட்டிருப்பதால் அதற்கேற்ற வகையில் இடங்கள் மற்றும் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கே.கே.கலை இயக்குநர் மணிகண்டன் சந்திரசேகர் அவருக்குப் பக்கபலமாக இருந்திருப்பது காட்சிகளில் புலனாகிறது.

விபின் பாஸ்கரின் பின்னணி இசை,பரபரப்பு.திகைப்பு, பயம் ஆகிய உணர்வுகளைக் காதுகளில் நிறைக்கிறது.

தினேஷ் குமாரின் படத்தொகுப்பு,தொடரை வேகமாகவும் விறுவிறுப்பாகவும் கொண்டு செல்லப் பயன்பட்டிருக்கிறது.

எழுதி இயக்கியிருக்கிறார் நவீன்குமார் பழனிவேல்.

அறுபதுக்கும் மேற்பட்ட கொலைகள்.அவை பெரும்பாலும் கணவன் மனைவியர்,அவர்களைக் கொலை செய்துவிட்டு கணவரின் அரணாக்கயிறையும் மனைவியின் தாலியையும் மட்டும் எடுத்துச் செல்லும் கொலையாளிகள் என்கிற உண்மை நிகழ்வுகளை அடிப்படையாக வைத்துக் கொண்டு, அதன் பின்னணியை விரிவாக விவரித்திருத்திருக்கிறார்.

1999 ஆம் ஆண்டு நடக்கும் கதை என்பதால், அதற்கேற்ற இடங்கள்,அக்கால வாகனங்கள்,அப்போதைய வீடுகள் மற்றும் வண்ணங்கள் ஆகியனவற்றைக் கவனமாக ஒருங்கிணைத்திருக்கிறார்கள்.

மொத்தம் ஆறு அத்தியாயங்களாகத் தொடர் விரிந்திருக்கிறது.இதுபோன்ற தொடர்களில் கொலையாளி யார் எனும் மர்மத்தை கடைசியில்தான் வெளிப்படுத்துவார்கள்.அந்தக் கேள்விக்கான விடைக்காகத்தான் மக்கள் பார்ப்பார்கள் என்பது எதார்த்தம்.ஆனால், இத்தொடரின் இரண்டாம் அத்தியாயத்திலேயே கொலையாளி யார்? என்பதை வெளிப்படுத்திவிட்ட போதும்,கொலைக்கான காரணம் என்ன? காவல்துறை கண்டறிந்தது எப்படி? என்கிற கேள்விகளுக்கு விடையாக அடுத்தடுத்த பாகங்களைக் கொடுத்திருக்கிறார்கள்.

திரில் பட இரசிகர்களுக்கேற்ற தொடர் என்றாலும் குடும்பத்தோடு அமர்ந்து பயந்து பார்க்கும் தொடராகவும் இருப்பது பலம்.

– இளையவன்.

பின்குறிப்பு – ஜீ 5 இணையதளத்தில் பிப்ரவரி 27 முதல் இத்தொடரைப் பார்க்கலாம்.

Related Posts