தாய்க்கிழவி – திரைப்பட விமர்சனம்
ஒரு கிராமத்தில் வாழும் வயது முதிர்ந்த பெண்மணி ராதிகா சரத்குமார்.அவருக்கு அருள்தாஸ்,சிங்கம்புலி,பாலசரவணன் ஆகிய மூன்று மகன்கள்.ஒரு மகள் ரேச்சல் ரெபக்கா.கணவனை இழந்த பின்னரும், யாருடைய தயவும் இன்றி, வட்டிக்குப் பணம் கொடுத்து முரட்டுத்தனமாக வசூலித்துக் கொண்டிருப்பவர்.அவரைப் பார்த்து ஊரே அச்சப்படுகிறது. மகன்கள் விட்டுவிட்டுப் போய்விட்டார்கள் என்றாலும் தெனாவெட்டாகத் திரிபவர்.
ஒருநாள் திடீரென நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் விழுகிறார்.அவர் மரணத்தை எதிர்பார்த்து எல்லோரும் காத்திருக்கும் நேரத்தில் அவர் பெருமதிப்பிலான தங்கம் வாங்கி பதுக்கி வைத்திருக்கும் தகவல் கிடைக்கிறது.அதனால் அவரைக் காப்பாற்றி அந்தத் தங்கத்தைக் கைப்பற்ற மகன்கள் முயல்கிறார்கள்.
அவர்கள் முயற்சி பலித்ததா? இல்லையா? என்பதைச் சொல்லியிருக்கிறது தாய்க்கிழவி படம்.
தாய்க்கிழவியாக கதையின் நாயகியாக நடித்திருக்கும் ராதிகாவுக்கு இது ஒரு வாழ்நாள் படம்.நடிப்பில் அவர் ஏற்கெனவே தன்னை நிரூபித்தவர் என்றாலும் இதுவரை ஏற்காத தண்டட்டி கிழவி வேடமேற்று அதை அச்சு அசலாக வெளிப்படுத்தி அமோக வரவேற்புப் பெறுகிறார்.
மகன்களாக நடித்திருக்கும் சிங்கம்புலி, அருள்தாஸ், பால சரவணன் ஆகியோர் வேடங்களும் அவற்றில் அவர்கள் நடிப்புகளும் ஒன்றுக்கொன்று இயைந்து நின்று இரசிக்க வைக்கின்றன.
மகளாக நடித்திருக்கும் ரேச்சல் ரெபக்கா நல்லதேர்வு.பொருத்தமான நடிப்பு.
இளவரசு, முனீஸ்காந்த்,முத்துக்குமார், ஜார்ஜ்மரியான் ஆகிய அனுபவ நடிகர்களை அழகாகக் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
விவேக் விஜயகுமாரின் ஓளிப்பதிவில், மதுரை மாவட்ட கிராமங்களுக்குச் சுற்றுப்பயணம் செய்த உணர்வு ஏற்படுகிறது.
நிவாஸ் கே.பிரசன்னா இசையில் முருகன் பாடல் நன்று.பின்னணி இசை திரைக்கதையோடு மிகவும் இசைந்திருப்பதால் கூடுதல் பலம்.
படத்தொகுப்பாளர் ஷான் லோகேஷ், முதல்பாதியில் சறுக்கியிருக்கிறார்.இரண்டாம் பாதியில் இருப்பை நிறுவியிருக்கிறார்.
தமிழ்நாட்டு கிராமங்களின் மண்மணத்தை உலகறியச் செய்யவேண்டும் என்கிற நோக்கில் ஒரு பெண்மணியை மையப்படுத்தி அவருடைய குடும்பம் அவர் வசிக்கும் கிராமம் அங்குள்ள மனிதர்கள் மற்றும் நடைமுறைகள் ஆகியனவற்றை எழுதியிருக்கிறார் இயக்குநர் சிவகுமார் முருகேசன்.
ஆழந்து நோக்கினால்,முதன்மைக் கதாபாத்திரம் உட்பட பெரும்பாலானவை எதிர்மறை எண்ணங்களையே ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றன. எதார்த்தத்தில் இவையும் நாட்டில் நிறைந்திருக்கின்றன என்பதை நினைத்து ஆறுதல் கொள்ளலாம்.சில பல குறைகளைத் தாண்டி மண்மணக்கும் படம்.
– வெற்றி











