சினிமா செய்திகள்

விஷால் 35 படப்பெயர் இதுதான் – விரைவில் அறிவிப்பு

நடிகர் விஷால் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பும் பூசையும் ஜூலை 14 அன்று நடைபெற்றது.

நடிகர் விஷால் நடிப்பில் இவ்வாண்டு ஜனவரியில் வெளியான படம் மதகஜராஜா.அது பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட படம்.அதற்கு முன்பு விஷால் நடிப்பில் வெளியான படம் ரத்னம்.2024 ஏப்ரலில் அப்படம் வெளியானது.அதன்பின் அவருக்குப் படம் எதுவும் இல்லை.ரத்னம் படத்துக்குப் பிறகு அவரே இயக்கி நடித்து தயாரிக்கும் துப்பறிவாளன் 2 படத்தைத் தொடங்குவார் என்று சொல்லப்பட்டது.பொருளதாரச் சிக்கல் காரணமாக அந்தப்படம் தொடங்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில்தான் இந்தப்படம் தொடங்கப்பட்டிருக்கிறது.

விஷால் நடிக்கும் 35 ஆவது படமாக இத்திரைப்படம் தயாராகிறது. இப்படத்தை தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில் உருவாக உள்ளது.அறிவிக்கும்போது சூப்பர்குட் ஃபிலிம்ஸ் மட்டும் என்று மட்டும் இருந்த இப்படத்தில் விஷாலின் சொந்தப்பட நிறுவனமான விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனமும் இணைந்திருக்கிறது.

இயக்குநர் ரவி அரசு இயக்கும் இந்தப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்கிறார்.தம்பி ராமையா, அர்ஜெய் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். தற்போது இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அஞ்சலி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தப் படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுகிறார்.படத்தொகுப்பை என்.பி.ஶ்ரீகாந்த் கவனிக்க துரைராஜ் கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார்.இந்தப்படத்தின் மூலம் மார்க் ஆண்டனி வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் நடிகர் விஷால் உடன் இணைகிறார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று வருகிறது.அங்கு பல்வேறு காட்சிகளைப் படமாக்கியிருக்கிறார்கள். அதோடு முக்கியமான சண்டைக் காட்சி ஒன்றினையும் திலீப் சுப்பராயன் தலைமையில் காட்சிப்படுத்தி வருகிறார்கள். ஒரே கட்டமாக படப்பிடிப்பினை முடிக்க வேண்டும் என்று படக்குழுவினர் திட்டமிட்டு பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்தப்படம் அறிவிப்பு மற்றும் பூசையின் போது படத்தின் பெயரை வெளிப்படுத்தவில்லை.பெயர் வைக்காமல் இருந்திருப்பார்கள் என்று நினைத்தால் பெயர் வைத்துவிட்டார்கள். அந்த அறிவிப்பைத் தனியாக வெளியிடுவது என்றும் அப்போதே படத்தின் வெளியீட்டுத் தேதியையும் வெளியிடுவது என்று திட்டமிட்டு இருக்கிறார்களாம்.விரைவில் அந்த அறிவிப்பை வெளியிடவிருக்கிறார்கள்.

இப்படத்துக்கு மகுடம் என்று பெயர் வைத்திருக்கிறார்களாம்.

படக்குழுவு மகுடம் சூடட்டும்.இரசிகர்களுக்கும் இனிப்பான படத்தை வழங்கட்டும்.

Related Posts