September 12, 2026
செய்திக் குறிப்புகள்

பாக்யராஜ் நடிக்கும் புதியபடம் அந்த 7 நாட்கள் – விவரம்

இயக்குநர் எம்.சுந்தர் இயக்கத்தில் அஜித்தேஜ் மற்றும் ஸ்ரீஸ்வேதா ஆகியோர் நாயகன் நாயகியாக நடித்திருக்கும் படம் அந்த ஏழு நாட்கள்.இப்படத்தில், கே.பாக்யராஜ், நமோ நாராயணன், சுபாஷினி கண்ணன், தலைவாசல் விஜய், ஏ.பி.ஜனகன், வாசு சீனிவாசன், ராகவன், சாய் கோபி, விதுஷ்ணவி, ஆதித்யா, கவிப்ரியா, ராம்ஜி, மோகனா, செம்புலி ஜெகன், பாரதிராஜா, அற்புதன் விஜயன், பேபி வைணுவ ஸ்ரீ, பரோட்டா முருகேசன், சாந்தகுமார், கார்த்தி, பிரதீப், ஜனா, ராம்குமார், தனசேகரன், மூர்த்தி, அப்பல்லோ ஹரி, விஜயராஜ், இளங்கோவன், ஜெய்மன், யூசுப், ஆர்.ரூபகரன், சோபியா, ரவி மற்றும் பங்கஜ் எஸ்.பாலாஜி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்திற்கு கோபிநாத் துரை ஒளிப்பதிவு செய்துள்ளார். சச்சின் சுந்தர் இசையமைக்க, முத்தமிழன் ராமு படத்தொகுப்பு மற்றும் வி.எஃப்.எக்ஸ் பணிகளைக் கவனிக்கிறார். டி.கே.தினேஷ்குமார் கலை இயக்குநராகப் பணியாற்ற, மோகன் ராஜன் பாடல்கள் எழுதியுள்ளார்.

பெஸ்ட்காஸ்ட் ஸ்டுடியோஸ் சார்பில் முரளி கபீர்தாஸ் தயாரித்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, சென்னை மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் 45 நாட்கள் நடந்து முடிந்துள்ளது.படப்பிடிப்பிற்குப் பிறகான வேலைகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

இப்படத்தை, செப்டம்பர் 12 ஆம் தேதி திரையரங்குகளில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் முரளி கபீர்தாஸ்,இயக்குநர் எம்.சுந்தர் ஆகியோர் படம் பற்றிப் பகிர்ந்து கொண்டார்கள்.

தயாரிப்பாளர் முரளி கபீர்தாஸ் கூறியதாவது….

நான் ஸ்டுடியோ வைத்திருக்கிறேன்.இப்படத்தின் இயக்குநர் சுந்தர் இசையமைப்பாளர் சச்சின் சுந்தர் ஆகியோரை எனக்குத் தெரியும். அவர்களுக்கு வாய்ப்பு பெற்றுத்தர சில முயற்சிகளை மேற்கொண்டேன். அவை நடக்கவில்லை.அதன்பின், நாமே ஒரு வாய்ப்பைக் கொடுக்கலாம் என்று நினைத்துத்தான் இந்தப் படத்தைத் தயாரிக்க முன்வந்தேன்.இந்தப் படத்தின் கதை சிறப்பாக இருக்கிறது. நிச்சயம் ஒரு வித்தியாசமான காதல் கதையாக இருக்கும்.கதையைத் தாண்டி இந்தப்படத்தைத் தயாரிக்க இயக்குநர் சுந்தர் தான் காரணம். அவருடைய பண்பு மற்றும் நல்ல குணத்திற்காக இந்தப்படத்தைத் தயாரிக்கிறேன்.
திறமையானவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்க வேண்டும் என்று தோன்றியது. அதன்படி தற்போது மேலும் இரண்டு படங்கள் தயாரிக்கிறேன். அதில் ஒரு படம் 60 விழுக்காடு படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. மற்றொரு படம் விரைவில் தொடங்க இருக்கிறது.
எங்கள் இரண்டாவது படத்தில் வளர்ந்து வரும் ஒரு முக்கியமான நடிகர் நாயகனாக நடிக்கிறார்.அந்தக்கதைக்குர்க் தேவைப்பட்டதால் அவரைத் தேர்வு செய்தோம்.இனி நாங்கள் தயாரிக்கும் அனைத்துப் படங்களையும் கையாள்வோம். மிகப்பெரும் பொருட்செலவு, பெரிய நடிகர்கள் படங்கள் தயாரிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை, குறைந்த முதலீட்டில், திறமையான புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நிறுவனத்தின் நோக்கம் என்றார்.

இயக்குநர் சுந்தர் தனது அறிமுகம் மற்றும் படம் பற்றிக் கூறியதாவது….

நான் கே.பாக்யராஜ் சாரிடம் ‘சொக்கத்தங்கம்’ படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினேன். பிறகு அவருடன் பல கதை விவாதங்களில் பங்கேற்றேன்.
இந்தக் கதையை எழுதி முடித்ததுமே, ’டார்லிங் டார்லிங் டார்லிங்’ மற்றும் ‘அந்த 7 நாட்கள்’ தலைப்புகளைத் தேர்வு செய்தேன், பாக்யராஜ் சாரிடம் கதை சொல்லிவிட்டு,இந்த இரண்டு தலைப்புகளில் எதைக் கொடுத்தாலும் எனக்குச் சம்மதம் என்றேன், அவர் ‘அந்த 7 நாட்கள்’ தலைப்பு சரியாக இருக்கும் என்றார்.
பாக்யராஜ் சாரின் ‘அந்த 7 நாட்கள்’ படத்திற்கும் இந்தப்படத்திற்கும், கதை உள்ளிட்ட எந்த விசயத்திலும் ஒரு விழுக்காடு கூட சம்பந்தம் இல்லை.படத்தில் 7 நாட்களுக்குள் ஒரு விசயத்தை செய்து முடிக்கக் கூடிய கெடு ஹீரோவுக்கு இருக்கும்.7 நாட்களுக்குள் ஒரு கெட்ட விசயம் நடக்க இருக்கும், அதை நல்ல விசயமாக ஹீரோ மாற்ற முயற்சிக்கிறார், அது என்ன என்பது தான் கதை. அது என்ன என்பது சஸ்பென்ஸ். அதே சமயம், இது திரில்லர் படம் இல்லை, முழுக்க முழுக்க காதல் கதை தான். அதில் திரில்லரை லேசாக க்லந்திருக்கிறேன்.படத்திற்கும் சூரியகிரகணத்திற்கும் மிக முக்கியமான தொடர்பு இருக்கிறது. கடந்த ஜூன் அல்லது ஜூலையில் ஒரு சூரியகிரகணம் நிகழ்ந்தது, அதற்கு முன்பாக 300 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த சூரியகிரகணத்திற்கும் கதைக்கும் கூட தொடர்பு இருக்கிறது. வானவியல் அறிவியலை சார்ந்த அம்சங்களோடு, வித்தியாசமான காதல் கதையாக இருக்கும்.
இந்தப்படத்தின் கதையைப் படமாக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டேன், அப்போதுதான் முரளி கபீர்தாஸ் சார் கதை கேட்கும் தகவல் கிடைத்தது, அவரிடம் கதை சொன்னேன், அவருக்கு பிடித்திருந்ததால் இந்தப்படம் உருவானது.
இப்படத்தில் நாயகனாக நடிக்க வைக்க சுமார் 15 நபர்களைப் பார்த்தோம், ஆனால் யாரும் அமையவில்லை. பிறகு இன்ஸ்டா மூலம் அஜித்தேஜை பார்த்தோம்.அவர் கதைக்கான ஹீரோவாக சரியாக இருந்தார்.அவர் தெலுங்கு மொழி பேசுபவர்.அவருக்கு தமிழ் சுத்தமாகத் தெரியாது. அவரிடம் ஏழு மணி நேரம் ஆங்கிலத்தில் கதை சொன்னேன். அவரும் கதையை நன்றாக உள்வாங்கி சிறப்பாக நடித்திருக்கிறார். கதாநாயகியையும் இன்ஸ்டா மூலமாகத்தான் தேர்வு செய்தோம். அவரும் சிறப்பாக நடித்திருக்கிறார். நான் உட்பட படத்தில் பணியாற்றியிருக்கும் முக்கியமான தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் புதியவர்கள். புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதில் தயாரிப்பாளர் மிகத் தெளிவாக இருந்தார்.இசையமைப்பாளர் சச்சின் சுந்தர் என் மகன்தான். என் மகன் என்பதற்காக அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை, அவருடைய திறமைக்காகத்தான் தயாரிப்பாளர் வாய்ப்பு கொடுத்திருக்கிறார். படத்தைத் தயாரிக்கப் பணம் கொடுத்தோம் என்று இல்லாமல் கதை மற்றும் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு என அனைத்திலும் தயாரிப்பாளர் இணைந்து செயல்பட்டார். முக்கியமாக புதியவர்களாக இருக்க வேண்டும், திறமையானவர்களாக இருக்க வேண்டும் என்பதை மட்டுமே நோக்கமாக கொண்டு தயாரிப்பாளர் அனைவரையும் தேர்வு செய்தார்.அதில் நானும் ஒருவன் என்பது எனக்குப் பெருமை.
இப்படம் இப்போது தணிக்கைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.செப்டம்பர் 12 ஆம் தேதி படம் வெளியாகவிருக்கிறது.அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Posts