திரையுலக வேலை நிறுத்தம் தொடருகிறது – கமல் ரஜினி அதிருப்தி
புதிய திரைப்படங்களைத் திரையிடும் டிஜிட்டல் சேவை அமைப்புகள் அதிகக் கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து, மார்ச் 1-ந்தேதி முதல் புதிய படங்களை வெளியிடுவதை நிறுத்தி உள்ளனர்.மார்ச் 16-ந்தேதி முதல் சினிமா படப்பிடிப்புகளையும் இரத்து செய்து விட்டனர்.
இதனால் ஒட்டுமொத்த திரையுலகமும் முடங்கிக்கிடக்கிறது. இதுதொடர்பாக,
டிஜிட்டல் சேவை அமைப்பினருடனும், திரையரங்கு உரிமையாளர்களுடனும் நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்துவிட்டன.
போராட்டம் குறித்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் சென்னையில் மார்ச் 30 அன்று கூறியதாவது…..
சினிமா துறையை சீரமைக்கவும், திரையரங்குகளில் வ்சூல் நிலவரத்தை வெளிப்படை ஆக்கவும் கோரி, ஒரு மாதமாக வேலை நிறுத்தம் செய்கிறோம். டிஜிட்டல் சேவை அமைப்புகள் தியேட்டர்களில் வைத்துள்ள புரொஜக்டர்களுக்கு 10 வருடமாக தயாரிப்பாளர்கள் தவணைத் தொகையை செலுத்தி உள்ளோம்.
புரொஜக்டர்களுக்கு தயாரிப்பாளர்களிடம் பணம் வாங்குவது முறையல்ல. தியேட்டர்களில் கட்டண உயர்வால் கூட்டம் குறைந்துள்ளது. முதல் வரிசைக்கும், கடைசி வரிசைக்கும் ஒரே கட்டணம் வாங்குகின்றனர். ஏழைகளால் அதிகத் தொகை கொடுத்து படம் பார்க்க முடியவில்லை. பெரிய படங்களுக்கும், சிறிய படங்களுக்கும் ஒரே கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சிறு பட்ஜெட் படங்களுக்கு கட்டணத்தைக் குறைக்கச் சொல்கிறோம். ஆன்லைன் டிக்கெட் முன்பதிவுக்கு கூடுதலாக ரூ.30 கட்டணம் வசூலிக்கப்பட்டு, தனியார் நிறுவனத்துக்கு அந்த பணம் போவதை அனுமதிக்க முடியாது. இதன் காரணமாக ஒரு டிக்கெட்டுக்கு ரூ.200 வரை கொடுக்க வேண்டியதுள்ளது. அதை ரத்து செய்யவேண்டும்.
தியேட்டர்களில் டிக்கெட் விற்பனையை கம்ப்யூட்டர் மயமாக்க வேண்டும். இதன்மூலம் ஒரு படத்தின் மொத்த வசூலும் தெரியவரும். அதை வைத்து நடிகர்கள் சம்பளத்தையும் தீர்மானிக்க முடியும். இந்தக் கோரிக்கைகள் குறித்து திரையரங்கு உரிமையாளர்களுடன் ஆலோசித்தோம். ஆனால் தீர்வு ஏற்படவில்லை. கோரிக்கைகள் நிறைவேறுவதுவரை வேலை நிறுத்தம் தொடரும்.
இந்த பிரச்சினையை அரசிடம் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளோம்.அனுமதி கிடைத்தால், வருகிற புதன்கிழமை (4-ந் தேதி) திரையுலகினர் சென்னையில் கோட்டையை நோக்கி ஊர்வலமாக செல்ல இருக்கிறோம்.
ஊர்வலம் முடிவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும், செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவையும் சந்தித்து திரையுலக பிரச்சினையை தீர்க்கக்கோரி மனு கொடுப்போம். இந்த ஊர்வலத்தில் நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், பெப்சி தொழிலாளர்கள் உள்ளிட்ட திரையுலகின் அனைத்து சங்கங்களை சேர்ந்தவர்களும் கலந்து கொள்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
வேலைநிறுத்தம் தொடங்கி ஒரு மாதம் ஆகிவிட்டது. இன்னும் முடிவுக்கு வரவில்லை. கமல், ரஜினி ஆகிய முன்னணி நடிகர்கள் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும் போராட்டம் தொடரும் என்று விஷால் அறிவித்துள்ளார்.
இதனால், நடிகர்கள் இயக்குநர்கள் எல்லாம் விடுமுறை நாட்கள் போல இன்பச் சுற்றுலா செல்கிறார்கள், திரைப்படத் தொழிலாளர்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
இதனால் கமல், ரஜினி உள்ளிட்டோர் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.











