தொடங்குமுன்பே தடங்கல் – அதர்வா தம்பிக்கு நேர்ந்த சோகம்
விஜய் நடித்த மாஸ்டர் படத்தயாரிப்பாளர்களில் ஒருவர் சேவியர் பிரிட்டோ. இவருடைய மகள் சினேகாபிரிட்டோ. இவர் ஒரு திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இவருக்கும் நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷுக்கும் திருமணம் நடந்தது.
ஆகாஷுக்கும் திரைப்படங்களில் நடிக்கவேண்டுமென ஆசை. அதனால் மாமனார் சேவியர் பிரிட்டோவே அவரை வைத்துப் படம் தயாரிக்க முன்வந்தார்.
அதற்காக, 2021 ஏப்ரல் 14 அன்று சேவியர் பிரிட்டோ வெளியிட்ட அறிவிப்பில்,
மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் தயாரிக்கும் இரண்டாவது படம் இது.
பன்முகத் திறமை வாய்ந்த இயக்குநர் விஷுணுவர்தனுடன் இணைவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
நடிகர் முரளியின் மகனும் அதர்வாமுரளியின் இளைய சகோதரருமான ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகி நடிக்கிறார்.
இத்திரைப்படம் சம்பந்தப்பட்ட இதர நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம் விரைவில் வெளியிடப்படும்.
எங்களுக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்துவரும் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் எங்கள் நலன்விரும்பிகளுக்கும் எங்களது எக்ஸ் பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
இவ்வாறு கூறியிருந்தார்.
விஷ்ணுவர்தன் இயக்கும் இந்தப்படத்தில் இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
ஆனால் இந்தப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை.கடந்த டிசம்பரில் படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்லப்பட்டது ஆனால், உலகக்கோப்பைக் கால்பந்துப் போட்டியைக் காண ஆகாஷ் சென்றதாலும் கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப்புத்தாண்டு ஆகியனவற்றிற்குப் பிறகு அந்தப்படம் தொடங்கும் என்று சொல்லப்பட்டது.
இப்போதும் இந்தப்படம் தொடங்குவதற்கான சூழல் தென்படவில்லை.
என்னவென விசாரித்தால்?
முதலில் பதினேழு கோடி செலவு என்று திட்டமிடப்பட்டதாம். ஆனால், இந்தப்படத்தின் கதையை இறுதிசெய்த பிறகு அதற்கான செலவுத்தொகையைக் கணக்கிட்டுப் பார்த்திருக்கிறார்கள். சுமார் இருபத்தைந்து கோடி செலவாகும் என்று தெரியவந்திருக்கிறது.
இவ்வளவு தொகையா? குறையுங்கள் என்று தயாரிப்பாளர் தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தக்கதைக்கு இவ்வளவு செலவு செய்தாகவேண்டும் என இயக்குநர் சொல்லிவிட்டாராம்.
என்னதான் மருமகனுக்காகப் படம் எடுத்தாலும் இவ்வளவு பெரிய தொகை போட்டால் திரும்ப வருமா? என்கிற பயம் ஏற்பட்டுள்ளது.அதனால் படம் எடுப்பதா? வேண்டாமா? என்கிற யோசனையில் இருக்கிறதாம் தயாரிப்புத்தரப்பு.
இதனால் அப்படம் தொடங்குவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்கிறார்கள்.











