அட்லி ஷாருக்கான் படத்திலிருந்து அனிருத் நீக்கமா? – புதிய சர்ச்சை
அட்லி இயக்கத்தில் இந்தி நடிகர் ஷாருக்கான் நடிக்கும் படத்தின் பெயரும் வெளியீட்டுத் தேதியும் நேற்று (ஜூன் 2,2022)வெளியானது.
ஒன்றரை நிமிடம் ஓடும் குறுமுன்னோட்டமாக அது வெளியானது. அதன்படி படத்துக்கு ஜவான் என்று பெயரிடப்பட்டிருக்கிறது.
அதோடு படம் ஜூன் 2023 ஆம் ஆண்டு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஓராண்டுக்கு முன்பாக அதாவது ஜூன் 2,2023 இல் வெளியாகும் என்று ஜூன் 2,2022 அன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதுஒருபக்கம் என்றால், இன்னொரு பக்கம் இந்தப்படத்துக்கு இசை அனிருத் என்று சொல்கிறார்கள். அனிருத்தும் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில், கனவு நனவாகியது.ஷாருக்கான் படத்துக்கு இசையமைத்திருக்கிறேன், சகோதரர் அட்லிக்கு நன்றி. எல்லோரும் எங்களை ஆசிர்வதியுங்கள் என்று பதிவிட்டிருக்கிறார்.
ஆனால், ஜவான் பட அறிவிப்புக் காணொலி, படத்தைத் தயாரிக்கும் ரெட்சில்லீஸ் நிறுவனத்தின் அறிவிப்பு படத்தின் நாயகன் ஷாருக்கான் பகிர்வு ஆகிய எங்கும் அனிருத் பெயர் குறிப்பிடப்படவில்லை.
இதனால் இந்தப்படத்துக்கு அனிருத் இசையமைப்பாளராக நீடிப்பாரா? என்பது சந்தேகம்தான் என்று பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.
ஷாருக்கான் பகிர்வில் அனிருத் பெயர் இல்லாததால் இப்படியான பேச்சு வந்திருக்கிறது. இயல்பாக அவர் பெய்ர் விட்டுப்போனதா? அல்லது திட்டமிட்டு அவர் பெயரைத் தவிர்த்துவிட்டாரா? என்பதற்கான விடை போகப்போகத்தான் தெரியும்.











