சினிமா செய்திகள்

திரையரங்கு உரிமையாளர்களின் புது முடிவால் சினிமாவுக்குச் சிக்கல்

தமிழக அரசு விதித்துள்ள 8 சதவீத கேளிக்கை வரியை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும்; அதிக இருக்கைகள் உள்ள திரையரங்குகளில், இருக்கைகளைக் குறைக்க அனுமதி அளிக்க வேண்டும்; வருடத்துக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டிய திரையரங்கு உரிமத்தை, 3 வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கும் வகையில் மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்ச் 16,2018 ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தன.

இந்தக் கோரிக்கைகள் தொடர்பாக மார்ச் 20 ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் மனு அளித்தனர். சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்று வருவதால், இரண்டு நாட்கள் காத்திருக்கும்படி முதல்வர் பழனிச்சாமி தெரிவித்ததாக தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கப் பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

இந்நிலையில், மார்ச் 22 ஆம் தேதி மாலை தலைமைச் செயலகத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் அதிகாரிகளுடன் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த திருப்பூர் சுப்ரமணியம், அபிராமி ராமநாதன், பன்னீர்செல்வம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன்,

எங்களுடைய கோரிக்கைகளில் எதெல்லாம் முடியுமோ, அதிகாரிகளுடன் பேசி அவற்றை நிறைவேற்றித் தருவதாக அமைச்சர்கள் உத்தரவாதம் அளித்துள்ளனர். எனவே, தமிழகம் முழுவதும் நாளை முதல் எல்லா திரையரங்குகளும் இயங்கும். திரையரங்குகளிடம் எந்தப் படம் உள்ளதோ, அதை திரையிடுவார்கள் என்றார்.

திரையரங்கு உரிமையாளர்கள் அரசிடம் வைத்த கோரிக்கைகளில் ஒன்று, கிரிக்கெட் மற்றும் கால்பந்து போட்டிகளைத் திரையரங்குகளில் திரையிட அனுமதிக்க வேண்டும் என்பது.

பரபரப்பான கிரிக்கெட் போட்டி நடக்கும் நேரத்தில் அதை நேரடியாக திரையரங்கில் ஒளிபரப்பு செய்தால் அதற்கு ரசிகர் கூட்டம் வரும் என்பது அவர்களது கணிப்பு.

இந்தக் கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டால், அந்த நேரத்தில் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் படக்காட்சி இரத்து செய்யப்படும். அப்போது கிடைக்கவேண்டிய வசூலும் குறையும் இதனால் சினிமா உலகத்துக்குச் சிக்கல்தான் என்கிறார்கள்.

Related Posts