பீ.வாசு தங்கைமகன் மிஷ்கின் நடிகர் மாதவன் ஆகியோரின் சிஷ்யன் – இயக்குநர் பாலாஜிமாதவன் பேட்டி
சிவாஜி,எம்ஜிஆர்,என்டிஆர் உள்ளிட்ட திரையுலக ஜாம்பவான்களின் ஒப்பனைக் கலைஞராகத் திகழ்ந்தவர் பீதாம்பரம்.அவருடைய மகன் இயக்குநர் பீ.வாசு.அந்தக் குடும்பத்திலிருந்து மூன்றாம் தலைமுறையாகத் திரையுலகுக்கு வந்திருக்கிறார் இயக்குநர் பாலாஜிமாதவன்.இவர் இயக்குநர் பீ.வாசுவின் சகோதரி மகன்.
பிக்பாஸ் புகழ் சிபி,பவ்யா தாரிகா, ஆரண்யகாண்டம் புகழ் யாஸ்மின் பொன்னப்பா,ராதாரவி,ஜெய் ஆதித்யா காங், ஜகன்,வின்செண்ட் நக்குல்,அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இடி மின்னல் காதல் படத்தின் இயக்குநர்தான் பாலாஜிமாதவன்.
பாலாஜி மாதவன் இப்படத்தை எழுதி இயக்கியதோடு இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஜெயச்சந்தர் பின்னாம்னேனியுடன் இஐந்து தயாரித்தும் இருக்கிறார்.
இப்படத்துக்கு ஆண்டனி படத்தொகுப்பு செய்துள்ளார், சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.கபிலன் பாடல்கள் எழுதியுள்ளார்.
வலிமையான தொழில்நுட்பக் கூட்டணியுடன் உருவாகியுள்ள இப்படம் மார்ச் 29 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.இப்படத்தை டிரீம்வாரியர் நிறுவனம் தமிழ்நாடு திரையரங்குகளில் வெளியிடுகிறது.
இந்நிலையில் படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளர்களில் ஒருவருமான பாலாஜிமாதவனுடன் ஓர் உரையாடல்….
1.நீங்கள் திரையுலகுக்குள் வந்தது எப்படி?
கல்லூரியில் படிக்கிற நேரத்தில் திரையுலகுக்குள் நுழைவது என்கிற முடிவை எடுத்தேன்.முதல்படியாக 2011 நவம்பர் 26 அன்று இயக்குநர் மிஷ்கின் சாரை சந்தித்தேன்.அவரிடம் உதவியாளராகச் சேர்ந்தேன்.முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் மற்றும் பிசாசு ஆகிய படங்களில் அவருடன் பணியாற்றினேன்.அதன்பின் அவரிடமிருந்த கெளதம் ராமச்சந்திரன் இயக்கிய ரிச்சி, கார்கி ஆகிய படங்களில் இணை இயக்குநராக வேலை செய்தேன்.அதற்கடுத்து நடிகர் மாதவனைச் சந்தித்தேன்.அவருடைய ராக்கெட்ரி படத்தில் இணை இயக்குநரானேன்.மிஷ்கின் சார் மாதவன் சார் ஆகியோரிடம் ஏராளமான விசயங்களைக் கற்றுக் கொண்டேன்.அந்தத் தெம்பில் இந்தப்படத்தை இயக்கியிருக்கிறேன்.
2.இடிமின்னல்காதல் படம் பற்றி..?
ஆறு கதாபாத்திரங்களை மையப்படுத்திய ஒரு கதை. அந்த ஆறு பேருமே தவறு செய்வார்கள்,அதை அவர்களே சரிசெய்வார்கள் என்கிற திரைக்கதை.மிக வித்தியாசமான அனுபவத்தை உங்களுக்குக் கொடுக்கும் படமாக இது இருக்கும்.

3.நீங்களே தயாரிப்பாளர் ஆனது ஏன்?
கொரோனா முடக்கக் காலகட்டத்தில் இப்படத்தை எடுக்கத் திட்டமிட்டோம்.அதற்கு தயாரிப்பாளரும் தயார். இரண்டு ஊரடங்குகள் முடிந்து மூன்றாவது ஊரடங்கு வருமா? இல்லையா? படத்தை இப்போது தொடங்கலாமா?வேண்டாமா? என்கிற குழப்பத்துக்குள் சிக்கி தாமதமாகிக் கொண்டேயிருந்தது.அப்போது என்னுடைய ஒளிப்பதிவாளர் சொன்ன ஒரு வார்த்தை நாங்களே இப்படத்தைத் தயாரிக்கக் காரணம்.அப்படி அவர் சொன்னது,ஒரு படம் எடுப்பதற்கான எல்லாமே தயாராக இருக்கிறது. தயாரிப்பாளரின் தயக்கம்தான் தாமதத்துக்குக் காரணம்.ஏன் நாமே தயாரிக்கக் கூடாது? என்பதுதான். உடனே அதற்கான சாத்தியங்களை ஆராய்ந்தோம்.ஒளிப்பதிவாளரும் தயாரிப்பில் இணைந்தார்.எல்லாம் நல்லபடியாக நடந்தது.
4.முதல்படத்திலேயே இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்.அந்த அனுபவம் எப்படி இருந்தது?
மிஷ்கின் சார்,மாதவன் சார் ஆகிய இருவருமே இயக்கம்,தயாரிப்பு,நடிப்பு ஆகிய எல்லாவற்றையும் செய்பவர்கள். அவர்கள் நடிப்பதற்காக கேமிரா முன்னால் போகவேண்டியிருப்பதால் உடனிருப்பவர்களிடம் அதிகப் பொறுப்பு வரும்.அந்த இடத்தில் நான் இருந்ததால் இயக்கம் மட்டுமின்றி தயாரிப்பிலும் நிறையக் கற்றுக் கொள்ள முடிந்தது. எனவே முதல்படத்திலேயே இரண்டு வேலைகளையும் எடுத்து சிக்கலின்றி செய்திருக்கிறேன்.

5.படம் முடிந்த பிறகு இரண்டு துறைகளிலும் பெற்ற அனுபவங்கள்..?
இயக்கத்தில் எந்தச் சிக்கலும் இல்லை.தயாரிப்பில் நிறைய அனுபவங்கள்.வெளியிலிருந்து இந்தத் தயாரிப்பாளர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்?என்று நினைத்திருக்கிறேன்.அந்த எண்ணம் இப்போது முற்றிலும் மாறிவிட்டது.இதுகுறித்து பட வெளியீட்டுக்குப் பின் விரிவாகப் பேசுகிறேன்.
6.இப்போதைய நிலையில் படம் உங்களுக்கு நிறைவாக வந்திருக்கிறதா?
நானே இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என்பதாலும் ஆண்டனி, சாம்.சிஎஸ் என வலுவான தொழில்நுட்பக் கலைஞர்கள் அமைந்திருப்பதாலும் படம் சிறப்பாக வந்திருக்கிறது.அதற்கு சான்றாக இப்படத்தைப் பார்த்துவிட்டு நாங்கள் வெளியிடுகிறோம் என்று டிரிம்வாரியர் நிறுவனம் முன்வந்திருப்பதைச் சொல்லலாம்.
7.உங்கள் மாமா பீ.வாசு படம் பார்த்தாரா?
அவர் மக்களோடு உட்கார்ந்து படம் பார்ப்பதைத்தான் விரும்புவார். எனவே படம் வெளியான பிறகு பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டார்.அதேசமயம் படம் சம்பந்தப்பட்ட விழாக்களில் கலந்துகொள்வார்.
8.உங்கள் முதல் படத்தில் சக்தியை கதாநாயகனாக்கியிருக்கலாமே?
இந்தக்கதை முற்றிலும் புதிதாக ஒருவரைத்தான் கேட்டது.சக்திக்கு ஒரு இமேஜ் இருக்கிறது.அவர் இப்படிச் செய்கிறார் என்றால் நம்பமுடியாமல் போகும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் அவரை நடிக்க வைக்கவில்லை.
– அன்பன்










