காமி – தெலுங்குத் திரைப்பட விமர்சனம்
சிகிச்சை எதுவுமில்லாத விநோத நோயால் பாதிக்கப்படுகிற கதாநாயகன் விஷ்வக்சென், அந்நோயைத் தீர்க்கும் அரியவகைக் காளான் இமயமலைப்பகுதியில் இருக்கிறதென்பதை அறிந்து அதைத் தேடிப்போகிறார்.அந்தக் காளான் பற்றி ஆய்வு செய்யும் மருத்துவர் சாந்தினி செளத்ரியும் அவருடன் இணைந்து பயணிக்கிறார்.
இந்த மையக்கதையோடு இரண்டு கிளைக்கதைகளும் இருக்கின்றன.அவை என்ன? இம்மூன்றும் இணையும் புள்ளி எது? என்பதைச் சொல்லியிருக்கும் படம் காமி.
நாயகன் விஷ்வக் சென் ஒரு அகோரியாக திறம்பட நடித்திருக்கிறார், சிகிச்சை எதுவும் இல்லாத நோயால் பாதிக்கப்பட்டவர் வேடத்தைத் தேர்ந்தெடுத்ததன் மூலம், இந்த பாணியிலான திரைப்படத்தை முயற்சித்ததற்காக பாராட்டுப்பெறுகிறார்.
சாந்தினி சௌத்ரி கதாபாத்திரம், மற்ற கதாபாத்திரங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் கலந்து நிறையும் கதாபாத்திரம்.இப்படி ஒரு பாத்திரத்தை ஏற்று அதில் சிறப்பாக நடித்துள்ளார்.
தேவதாசியாக நடித்திருக்கும் அபிநயா நன்றாக நடித்து சோகத்தை ஏற்படுத்துகிறார்.ஹரிகா, முகமது சமத் மற்றும் பிற நடிகர்கள் அனைவரும் தங்கள் பங்கில் குறைவைக்கவில்லை.
விஷ்வநாத் ரெட்டி, ராம்பி நந்திகம் ஆகியோரின் ஒளிப்பதிவு மற்றும் கணினி வரைகலைக் காட்சிகள் படத்தின் தரத்தை உயர்த்தியிருப்பதோடு மயிர்க்கூச்செரியும் காட்சி அனுபவங்களைத் தருகின்றன.
திரைக்கதையின் பயணத்துக்கு ஏற்ப நரேஷ் குமரன் பின்னணி இசை அமைந்து படபடக்க வைத்திருக்கிறது. ஸ்வீக்கர் அகஸ்த்தியின் இசையில் பாடல்கள் கேட்கலாம்.
இராகவேந்திர திருனின் படத்தொகுப்பு அங்கங்கே சலிப்பை ஏற்படுத்தினாலும் பெரும்பகுதியை இயல்பாக்கியிருக்கிறது.
இயக்குநர் வித்யாகர் ககிதா, ஒரு சவாலான திரைக்கதையை எடுத்துக் கொண்டு அதை நேர்த்தியாகக் கொடுக்க முனைந்திருக்கிறார்.வெவ்வேறு கதைகளை ஒருங்கிணைக்கும் உத்தி, அவற்றைக் காட்சிகளாக வெளிப்படுத்தும் தன்மை ஆகியனவற்றில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.
மருத்துவம்,அறிவியல் ஆகியனவற்றைப் பேசவேண்டிய கதையில் ஆன்மீகம் தூக்கலாக இருப்பதுதான் நெருடல்.
– இளையவன்











