மிருகா – திரைப்பட விமர்சனம்
கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்த ஸ்ரீகாந்த் முற்றுமுழுக்கக் கெட்டவனாக நடித்திருக்கும் படம் மிருகா.
மறைமுகமாகவெல்லாம் இல்லாமல் முதல்காட்சியிலேயே அவர் எவ்வளவு கொடூரமானவர் என்பதைக் காட்டியே படம் தொடங்குகிறது.
கொடூரக் கொலைகாரர் வேடத்துக்கு ஏற்ப நடிக்க முயன்றிருக்கிறார் ஸ்ரீகாந்த்.ராய்லட்சுமி, நைரா,வைஷ்ணவிசந்திரன்,த்விதா ஆகிய அழகிய பெண்களுடன் நெருங்கி நடிக்கும் வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
ராய்லட்சுமி, பெரும் பணக்கார விதவை வேடத்தில் சரியாகப் பொருந்தியிருக்கிறார். அழகாக இருப்பதோடு கடைசிக் கட்டப் போராட்டக் காட்சிகளிலும் நன்றாக நடித்திருக்கிறார்.
கதை திரைக்கதை எழுதி ஒளிப்பதிவு செய்திருக்கிறார் எம்.வி.பன்னீர்செல்வம். கோவா,ஊட்டி ஆகியனவற்றின் இயற்கை அழகுக் காட்சிகளை மேலும் அழகாக்கியிருக்கிறார். படத்தில் முக்கிய இடம் பிடித்திருக்கும் புலி வரும் காட்சிகள் இயல்பாக இருக்க கடுமையாக உழைத்திருக்கிறார்.
அருள்தேவின் பின்னணி இசையால் புலி வரும் காட்சிகளில் படபடப்பு அதிகரிக்கிறது.
மனிதர்களுக்குள் இருக்கும் விலங்குகளை வெளிப்படுத்த உண்மையான விலங்கைப் பயன்படுத்திப் படத்தை இயக்கியிருக்கிறார் ஜே.பார்த்திபன்.
தொடக்கத்திலேயே கெட்டவராகிவிட்ட ஸ்ரீகாந்த் எந்த இடத்தில் மாட்டிக் கொள்ளப் போகிறார்? என்கிற எதிர்பார்ப்பில் படம் நகருவதும் ஒரு வீட்டுக்குள் புலியிடம் மாட்டிக் கொண்ட மூவர் எப்படித் தப்புவார்கள்? என்கிற எதிர்பார்ப்பும் படத்துக்குப் பலமாக அமைந்திருக்கிறது.











