விமர்சனம்

பிரின்ஸ் – திரைப்பட விமர்சனம்

சொந்தச் சாதியைச் சேர்ந்த சொந்தத் தங்கை மகனைக் கல்யாணம் செய்ததால் மகளிடம் பேசாமல் இருக்கிறார் அப்பா சத்யராஜ். அவருடைய மகன் சிவகார்த்திகேயன், சாதி, மதம் மட்டுமின்றி நாடும் கடந்து இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலிக்கிறார். சந்தோசமாக ஒப்புக்கொள்ள வேண்டிய சத்யராஜ் அதைக் கடுமையாக எதிர்க்கிறார். 

ஏன் எதிர்க்கிறார்?  கடைசியில் என்ன நடக்கிறது? என்பதை நகைச்சுவை கலந்து சொல்ல முயன்றிருக்கும் படம் பிரின்ஸ்.

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என ஜாலியாக இரசித்து நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். கொஞ்சம் எடை கூடியிருந்தாலும் நடனம் சண்டை ஆகியனவற்றில் துறுதுறுப்பும் வேகமும் காட்டியிருக்கிறார்.

உக்ரைனைச் சேர்ந்த நாயகி மரியா, தமிழ்த் திரைப்படக் கதாநாயகிகளுக்கேற்ற அனைத்து அம்சங்களுடனும் இருக்கிறார். சோகமான காட்சிகளிலும் பொருத்தமாக நடித்திருக்கிறார். நன்றாக நடனமும் ஆடுகிறார்.

முன்னாள் அரசு அதிகாரி, இந்நாளில் ஊர்த்தலைவர் உயர்ந்த எண்ணங்கள் கொண்டவர் ஆகிய சிறப்புகளுக்குச் சம்பந்தமில்லாமல் சத்யாராஜின் பேச்சு செயல் ஆகியன அமைந்திருக்கின்றன. அவர் நல்லவரா? கெட்டவரா? அறிவாளியா? முட்டாளா? என்று பட்டிமன்றமே நடத்தலாம்.

ப்ராங்க்ராகுல், ஃபைனலி பரத், சதீஷ்கிருஷ்ணன் ஆகியோர் நாயகனின் நண்பர்களாக நடித்திருக்கின்றனர். அவர்களுக்குப் பெரிதாக வேலை இல்லை. ஹலோகந்தசாமி நன்றாகச் சிரிக்க வைக்கிறார்.

சிறப்புத் தோற்றத்தில் சூரி வரும் காட்சிகள் சோதிக்கின்றன. ஆனந்தராஜ் வரும் காட்சிகள் சிரிக்க வைக்கின்றன.
பிரேம்ஜிக்கு வித்யாசமான வேடம். ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

தமனின் இசையில் பாடல்கள் கேட்கலாம். பின்னணி இசையிலும் குறைவில்லை.

மனோஜ்பரம்ஹம்சாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் பளிச்சென இருக்கின்றன.

படத்தொகுப்பு செய்திருக்கும் பிரவீன்.கே. எல் இன்னும் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம்.

ஒரு மெல்லிய கதையை நகைச்சுவையாகச் சொல்லி இரசிகர்களைத் திருப்திப்படுத்திவிடலாம் என்று இயக்குநர் அனுதீப் நினைத்திருக்கிறார். வேடங்களில் தெளிவின்மை குறிப்பாக சத்யராஜ் சிவகார்த்திகேயன் ஆகியோரின் வேடங்களில் அடிக்கடி நிகழும் மாற்றங்கள் பலவீனமாகி அவர் எண்ணத்துக்கு எதிராக அமைந்துவிட்டது.

Related Posts