சினிமா செய்திகள்

அருவி இயக்குநருடன் கைகோர்க்கும் விஜய் ஆண்டனி – விவரம்

விஜய் ஆண்டனி கைவசம் இப்போது, இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் விஜய்மில்டன் இயக்கத்தில் மழை பிடிக்காத மனிதன், செந்தூர் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தனா இயக்கியுள்ள ஹிட்லர்,விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேசன் தயாரிப்பில் விநாயக் இயக்கியுள்ள ரோமியோ,நல்லுசாமி பிக்சர்ஸ் தயாரிப்பில் சுசீந்திரன் இயக்கும் வள்ளிமயில் ஆகிய படங்கள் இருக்கின்றன.

இவற்றில்,மழை பிடிக்காத மனிதன், ஹிட்லர் ஆகிய படங்கள் முழுமையாகத் தயாராகிவிட்டன. ரோமியோ வெளியீட்டுக்கு முன்பான இறுதிக்கட்டப்பணிகளில் இருக்கிறது. வள்ளிமயில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் இருக்கிறது.

இப்படங்களில் ரோமியோ படத்தை விஜய் ஆண்டனியின் சொந்த நிறுவனமான விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேசன் நிறுவனமே தயாரித்திருக்கிறது.இப்படம் விரைவில் வெளியாகும் என்றும் அதற்குப் பிறகு ஹிட்லர் படம் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.

எல்லாப்படங்களும் தயாராகிவிட்டன. வள்ளிமயில் படப்பிடிப்பு சில நாட்களே இருக்கின்றன.

இந்நிலையில், இப்போது புதிய படமொன்றில் நடிக்கவிருக்கிறார் விஜய் ஆண்டனி. அப்படத்தை அருவி, வாழ் ஆகிய படங்களை இயக்கிய அருண்பிரபுபுருசோத்தமன் இயக்கவிருக்கிறார்.

அவர் இயக்கிய அருவி படம் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்ற படம். ஆனால் அடுத்து இயக்கிய வாழ் படம் அவ்வளவு வரவேற்புப் பெறவில்லை.திரையுலக வியாபார மதிப்பீட்டில் அவர் தோல்வி இயக்குநர் என்றாலும், அவர் சொன்ன கதையால் ஈர்க்கப்பட்ட விஜய் ஆண்டனி அவர் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறாராம். அதோடு, அந்தப்படத்தைத் தன்னுடைய தயாரிப்பிலேயே எடுக்கவும் முன் வந்திருக்கிறாராம்.

இதனால், அப்படத்தின் வேலைகள் வேகமாகத் தொடங்கிவிட்டன என்கிறார்கள்.விஜய் ஆண்டனி தவிர கதாநாயகி உள்ளிட்ட மற்ற நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரைத் தேர்வு செய்யும் பணிகள் நடந்துகொண்டிருக்கின்றனவாம்.

ரோமியோ படத்தின் வெளியீட்டுத் தேதியை இறுதி செய்து அறிவித்த பின்பு இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

Related Posts