செய்திக் குறிப்புகள்

விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிழலுலகப்படம் – கொட்டேசன் கேங் இயக்குநர் பேட்டி

பிரியா மணி, சாரா, ஜாக்கி ஷெராப், சன்னி லியோன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் கொட்டேசன் கேங். இப்படத்தை விவேக் கே.கண்ணன் இயக்கியிருக்கிறார். காயத்ரி சுரேஷ், விவேக் கண்ணன் ஆகியோருடன் இணைந்து பிலிமினாட்டி எண்டர்டெயின்மெட் மற்றும் ஸ்ரீ குருஜோதி பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரித்திருக்கின்றன.

நிழலுலக தாதாக்கள், கூலிப்படையினர் பற்றிய கதையில் சமுதாய அக்கறை கொண்ட பார்வையுடன் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் படம் குறித்து இயக்குநர் விவேக் கே.கண்ணன் கூறியதாவது….

இது ஒரு லேடி கேங்ஸ்டாின் கதை. சகுந்தலா நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பெண். சில சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக கேங்ஸ்டராகிறார். தனக்கென ஒரு அடியாள் கூட்டத்தை ஏற்படுத்திக் கொள்கிறார். கேங்ஸ்டர்களின் ரோல் மாடலான சஞ்சய் தத் தனக்கு வரும் அசைன்மெண்டுகளை ஏலம் விடுவார்.

யார் குறைந்த பணத்துக்கு அந்த அசைன்மெண்டை செய்ய முன் வருகிறார்களோ அவர்களுக்கு அந்த வேலையைக் கொடுப்பார்.

இது மாதிரி கொட்டேஷன் கொடுத்து அசைன்மெண்ட் செய்த கொட்டேஷன் கேங் ஒன்று கேரளாவில் இருந்தது. அதனால் இந்த படத்திற்கு அதையே பெயராக வைத்தோம். பிரியாமணி சகுந்தலாவாக நடித்துள்ளார். சன்னி லியோனும் கேங்ஸ்டராக நடித்துள்ளார்.

நமக்குத் தெரியாத பல போதைப் பழக்கங்கள் இங்கு இருக்கின்றன. அதற்கு இளைஞர்கள் அடிமையாகி வாழ்க்கையைச் சீரழித்துக் கொள்கிறார்கள். குறிப்பாக அந்தப் போதைப் பொருட்கள் பற்றி பெற்றோர்களுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ எதுவும் தெரிவதில்லை, அவர்களுக்குத் தெரிந்த போதை மது மட்டுமே. ஆனால் அதைத் தாண்டிய ஒரு போதை உலகம் இங்கு இருக்கிறது, அதில் சிக்கிக்கொள்ளாமல் இளைஞர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று படத்தில் சொல்லியிருக்கிறோம்.

இந்தப் படத்தின் பல காட்சிகள் ராவாக இருக்கும். குறிப்பாக பிரியாமணி குழுவினரின் கொலை, சண்டைக்காட்சிகள் எல்லாமே ராவாக இருக்கும். அப்படிப்பட்ட காட்சிகளுக்காக இரசிகர்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும்.

இதில் நடித்திருக்கும் சாரா, போதைக்கு அடிமையானவராக நடித்திருந்தாலும், போதைப் பழக்கத்திற்கு ஆளாகி, அதில் இருந்து ஒருவர் மீண்டு வர முடியும், என்ற விசயத்தைச் சொல்லும்படியாக அவரது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும்.சாராவின் பருவத்தில் இருக்கும் பெண்தான் இதற்குப் பொருத்தமானவராக இருப்பார் என்று அவரது தந்தை அர்ஜுனிடம் பேசிய போது அவர் மகள் இப்படி நடிப்பதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால், படத்தின் தன்மைகளை அவருக்குத் தெளிவாக எடுத்துரைத்து இதனால் எந்தப் பாதிப்பும் வராது என்று புரிய வைத்து அவரை ஒப்புக்கொள்ள வைத்தேன். சின்னப் பெண் சாராவும் நான் சொல்வதைப் புரிந்து கொண்டு மிக அழகாக நடித்திருக்கிறார்.அவருக்கு எந்தச் சிக்கலும் இல்லாதவாறு மிகவும் பொறுப்புடன் இந்தப் படத்தை எடுத்திருப்பதாக நினைக்கிறேன்.

தீய பழக்கங்களைப் பற்றி மட்டுமே சொல்லும் படமாக இல்லாமல், நிச்சயமாக ஒரு விழிப்புணர்வுப் படமாக இருக்கும். அதைப்போல் இந்த படத்தை இளைஞர்களை விட பெற்றோர்கள் பார்க்க வேண்டும் என்பது தான் என் எண்ணம். காரணம், அவர்கள் இங்கு என்ன நடக்கிறது, என்ற உண்மையை தெரிந்துக்கொண்டால் தான் தங்களது பிள்ளைகளை பாதுக்காக்க முடியும், அதனால் இந்த படத்தை இளைஞர்கள் பார்க்கவில்லை என்றாலும் கூட பெற்றோர்கள் நிச்சயம் பார்க்க வேண்டும்.

இந்தப் படத்துக்கு வித்தியாசமான இசை வேண்டி டிரம்ஸ் சிவமணியை ஒப்பந்தம் செய்தேன். அவரும் இந்தப் படத்தின் பாடல்களையும், பின்னணி இசையையும் அற்புதமாகத் தந்திருக்கிறார்.அருண் பத்மநாபனின் ஒளிப்பதிவும். இந்தப் படத்துக்கு புதிய நிறத்தை தந்திருக்கிறது.

இன்றைய இளைஞர்களை மீட்டெடுக்கும் அவசியத்தேவை அடிப்படையில் உருவாகியிருக்கும் இந்தப்படத்துக்கு அனைவரும் ஆதரவு தரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Posts