பொங்கல் படங்களில் பின்வாங்கும் படம் எது?
2024 ஆம் ஆண்டு பொங்கல்திருநாளையொட்டி வெளியாகுமென்று அறிவிக்கப்பட்டிருக்கிற படங்கள் நான்கு.பண்டிகை நாட்களில் பத்துப்படங்கள் வெளியானதெல்லாம் ஒருகாலம்.இப்போது ஒரேபடம் எல்லாத்திரையரங்குகளிலும் என்று மாறிவிட்டது. பொங்கல் போன்று சுமார் ஒருவாரம் விடுமுறை கிடைக்கிற நாட்கள் என்றால் ஒன்றுக்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகலாம் என்று வகுத்துவைத்திருக்கிறார்கள்.
இந்நிலையில் 2024 பொங்கலுக்கு நான்கு படங்கள் என்று அறிவிப்புகள் வந்திருக்கின்றன.நான்கும் பெரிய படங்கள் என்பதால் திரையுலகம் பரபரப்பாக்கியிருக்கிறது.
சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான், சுந்தர்.சி யின் அரண்மனை 4, ரஜினிகாந்த் கவுரவத்தோற்றத்தில் நடித்திருக்கும் லால்சலாம், தனுஷ் நடிக்கும் கேப்டன்மில்லர் ஆகிய படங்கள்தாம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன.
இவற்றில் ஒவ்வொரு படத்துக்குமே சுமார் ஐநூறிலிருந்து அறுநூறு திரையரங்குகள் தேவைப்படும் எனும்போது இருக்கிற சுமார் 1100 திரையரங்குகளை இவர்கள் எவ்வாறு பகிர்ந்துகொள்வார்கள்? என்பதுதான் அனைவர் மனதிலும் உள்ள கேள்வி.
இந்தக் கேள்விக்கு விடையாக, நான்கில் ஒரு படம் கண்டிப்பாக வெளியாகாது மூன்று படங்கள் மட்டுமே வரும் என்று சொல்கிறார்கள்.வராமல் போகும் படம் எது என்றால்? ஆளுக்கு ஒரு விடை சொல்கிறார்கள்.
பொங்கலுக்கு அயலான், அரண்மனை 4, லால்சலாம் ஆகிய மூன்று படங்கள் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருந்தது. கடைசியாக அறிவிக்கப்பட்ட படம் கேப்டன்மில்லர்.
ஏற்கெனவே மூன்று படங்கள் இருக்கும்போது நான்காவதாக அவர்கள் அறிவித்தது ஏன்? என்றால், லால்சலாம் படத்தின் படப்பிடிப்புக்காட்சிகள் காணாமல்போய்விட்டன அதனால் அந்தப்படம் பொங்கலுக்கு வராது என்கிற உறுதியான தகவல்கள் உலாவந்தன.அதனால் கேப்டன்மில்லர் படம் அறிவிக்கப்பட்டது.
ஆனால், அந்த அறிவிப்புக்குப் பின், லால்சலாம் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. அதோடு நடிகர் ரஜினிகாந்த், ஒரு காணொலியில் பொங்கலன்று சந்திப்போம் என்று சொன்னதன் மூலம், லால்சலாம் பொங்கலன்று வெளியாகும் எனச் சொல்லாமல் சொல்லியிருந்தார்.
இதனால் திடுக்கிட்ட கேப்டன்மில்லர் படக்குழு ஓரிரு நாட்கள் தீபாவளி வாழ்த்துக்கூடச் சொல்லாமல் அமைதியாக இருந்தது.அதன்பின் பொங்கலுக்கு வருவது உறுதி என்று சொல்ல ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்தார் தனுஷ்.
இம்முறை, அயலான் வருவது சந்தேகம் அதனால் கேப்டன்மில்லர் குழு தெம்பாக இருக்கிறது என்கிறார்கள்.
ஆனால், அயலான் படக்குழுவினர் தீபாவளியையொட்டி வெளியிட்ட பதிவில், கேப்டன் அயலான் பாய்ஸ் என்று குறிப்பிட்டதன் மூலம் ரஜினி, தனுஷ் ஆகியோர் வந்தாலும் எதிர்கொள்வோம் என்று சொல்லியிருந்தனர்.
அதற்கு எதிர்வினையாகத்தான், ரஜினி வெளியிட்ட காணொலியில் மொய்தீன்பாய் என்று சொன்னதாகவும் பேச்சு வந்தது.
ஆகையால் அயலானும் தயாராகவிருக்கிறது.
அப்படியானால் நான்கு படங்களும் வருமா? என்றால் மூன்று விதமான சாத்தியங்கள் இருக்கின்றன என்கிறார்கள்.
அவற்றில் முதலாவது,
டீசர் வெளியிட்டாலும் ரஜினியே பேட்டி கொடுத்தாலும் லால்சலாம் பொங்கலுக்கு வராது.அதற்கான வாய்ப்பே இல்லை என்பது.
இரண்டாவது, முதலில் அறிவித்த மூன்று படங்களும் வெளியாவது உறுதி என்றால் கடைசியாக அறிவித்த கேப்டன்மில்லர் தள்ளிப்போகும் என்பது.
மூன்றாவதாக, லால்சலாம், அரண்மனை 4 ஆகிய இரண்டு படங்களையும் ரெட்ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. அந்நிறுவனம் லால்சலாம் வந்தால் அரண்மனை 4 படத்தைத் தள்ளி வைத்துவிடும் என்பது.
இவற்றில் எது நடக்கப்போகிறது? என்பது போகப்போகத்தான் தெரியும்.












