மார்கழித் திங்கள் – திரைப்பட விமர்சனம்
அப்பா அம்மாவை இழந்து தாத்தாவுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் பள்ளிமாணவியாக நாயகி ரக்ஷனா அவர் படிக்கும் பள்ளிக்கூடத்துக்குப் புதிதாக வருகிறார் நாயகன் ஷ்யாம்செல்வன். அதுவரை முதல்மதிப்பெண் எடுத்துக் கொண்டிருந்த நாயகி, நாயகன் வந்தபின்பு இரண்டாமிடத்துக்குப் போகிறார். இதனால் நாயகன் மீது கோபம் கொண்டு அவரிடமே சவால் விட்டு முதலிடம் பிடிக்கப் போராடுகிறார்.
அதையொட்டி நடக்கும் நிகழ்வுகளில் இருவருக்கும் காதல் வருகிறது. இந்தக் காதலுக்கு நாயகியின் தாய்மாமன் எதிர்ப்பு, தாத்தா ஆதரவு. இறுதியில் என்னவாகிறது? என்பதைச் சொல்வதுதான் படம்.
நாயகனாக அறிமுகமாகியிருக்கும் ஷ்யாம்செல்வன், கிராமத்துப் பள்ளி மாணவன் வேடத்துக்கு மிகப்பொருத்தமாக இருக்கிறார். நடிப்பிலும் குறைவில்லை.ஊருக்குப் போகுமுன் ஒரேயொரு முறை காதலியைப் பார்க்கவேண்டும் எனத் துடிக்குமிடத்தில் சிறப்பு.
நாயகியாக நடித்திருக்கும் ரக்ஷனா, படத்தை மொத்தமாகத் தாங்கி நிற்கிறார்.நேர்மைத்திறம் கொண்ட திடமான வேடம்.அதற்கு முழுமையாகத் தன்னை ஒப்புக்கொடுத்து வரவேற்புப் பெறுகிறார்.
நாயகியின் தோழியாக நடித்திருக்கும் நக்சாசரணுக்கும் முக்கியமான வேடம்.அதைச் சரியாகச் செய்து கவனிக்க வைத்திருக்கிறார்.
தாத்தாவாக நடித்திருக்கிறார் பாரதிராஜா. முதுமையின் தடுமாற்றம் நடையில் தெரிகிறது.நாற்காலியில் உட்கார்ந்தால் சிங்கத்தின் சீற்றம் வெளிப்படுகிறது.இவை அந்த வேடத்துக்குப் பலமாக அமைந்திருக்கிறது.இந்த வேடம் அந்தத் தாத்தாவுக்குச் சரி.ஆனால் நாமறிந்த படைப்பாளி பாரதிராஜாவுக்குப் பலவீனம்.
நாயகியின் தாய்மாமனாக நடித்திருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன். நடிப்புக்குப் புதியவர் போல் தெரியவில்லை என்பது அவருக்குப் பெருமை.
வாஞ்சிநாதன்முருகேசனின் ஒளிப்பதிவில் காட்சிகள் இனிமை.பறவைப்பார்வையில் கிணற்றைக் காட்டும்போதே கதையை யூகிக்க வைக்கிறார்.
இளையராஜாவின் இசையில் பாடல்களில் தாழ்வில்லை. பின்னணி இசையில் சில காட்சிகள் அருமை.பல காட்சிகளில் குறைவைத்திருக்கிறார்.
கதை திரைக்கதை வசனம் எழுதியிருக்கும் சுசீந்திரனை, தொடக்கம் முதல் இறுதிவரை நேர்மறைச் சிந்தனையும் அதன்விளைவாக அறச்சீற்றம் கொள்ளும் நாயகியின் பாத்திரத்தைப் படைத்ததற்காகவே பாராட்டலாம்.
வழக்கமான காதல்கதை, வழக்கமான எதிர்ப்பு ஆனால் அதிரவைக்கும் புதுமுடிவு என்பது படத்தை வேறுபடுத்திக் காட்டிப் பதற வைத்திருக்கிறது.
நடிகராக நாமறிந்த மனோஜ்பாரதிராஜா இப்படத்தின் மூலம் இயக்குநராகியிருக்கிறார்.புலிக்குப் பிறந்தது பூனையாகாது என்பதை நிறுவியிருக்கிறார்.
– தனா











