சினிமா செய்திகள்

அயலான் டீசர் அக்டோபர் ஆறு – இரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் அயலான்.ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோபிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் உட்பட பலர் இதில் நடித்துள்ளனர்.

இன்று நேற்று நாளை புகழ் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்துக்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார்.

கொரோனா உட்பட பல சிக்கல்களால் தாமதமான இந்தப்படம் இவ்வாண்டு தீபாவளியையொட்டி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதற்காக கணினி வரைகலைக்காட்சிகள் தொடர்பான வேலைகள் அசுர வேகத்தில் நடந்துகொண்டிருக்கின்றன. அதற்காக சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தி பல புதிய காட்சிகளை எடுத்திருந்தார்கள்.

4500 க்கும் மேற்பட்ட வரைகலைக் காட்சிகளைக் கொண்ட முதல் முழு நீளத் திரைப்படம் என்னும் பெருமை பெற்றிருக்கும் இப்படம் அதனாலேயே மேலும் தாமதமாகிறது.

2023 தீபாவளியன்று வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருந்த இப்படம் இன்னும் இரண்டு மாதங்கள் தள்ளிப்போய் 2024 பொங்கல் நாளையொட்டி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

செப்டம்பர் 23 ஆம் தேதி இதுகுறித்த அறிவிப்பை, கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் சமூகவலைதளங்கள் மூலம் வெளியிட்டிருந்தது.

அப்போதே இந்தப்படத்தின் புதிய டீசர் அக்டோபர் முதல்வாரத்தில் வெளியாகும் என்றும் சொல்லியிருந்தார்கள்.

அன்று சொன்னபடி நடக்கவிருக்கிறது.

ஆம், அயலான் புதிய டீசர் தயாராகிவிட்டதாம். பல சுவாரசியமான காட்சிகளுடன் தயாராகியிருக்கும் அந்த டீசர் அக்டோபர் ஆறாம்தேதியன்று வெளியாகவிருக்கிறது.

சமூகவலைதளங்கள் மூலமே வெளியிட்டுவிடலாமா? அல்லது ஒரு நிகழ்வாக நடத்தி வெளியிடலாமா? என்கிற ஆலோசனைகள் நடந்துகொண்டிருக்கிறதாம்.

எப்படி வெளியிட்டாலும் இரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சிதான்.

ஒன்று சொன்னபடி டீசர் வெளியாகிறது என்பது, இன்னொன்று அதன்மூலம் பொங்கலன்று படம் வெளியாகிவிடும் என்கிற உறுதிப்பாடும் இருப்பது ஆகியனதான் அந்த இரட்டிப்பு மகிழ்ச்சி.

Related Posts