ஜெயிலர் விழா ரெட்ஜெயண்ட் புறக்கணிப்பு
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஜெயிலர்.இந்தப்படத்தில் தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
ஆகஸ்ட் 10 ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஜூலை 28) சென்னையில் நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது.
நிகழ்வில் தயாரிப்பாளர் கலாநிதிமாறன்,ரஜினிகாந்த் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வு திரைப்பட ஆர்வலர்களுக்கும் ரஜினி இரசிகர்களுக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ள அதேநேரம் திரைத்துறையில் கடும் அதிருப்தியைச் சம்பாதித்துள்ளது.
பொதுவாக, இதுபோன்ற திரைப்படங்களின் இசை வெளியீட்டு நிகழ்வுகளுக்கு அப்படம் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அழைப்பு கொடுக்கப்படும். குறிப்பாக, திரைப்பட விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு முன்னுரிமை கொடுப்பார்கள்.
ஆனால், ஜெயிலர் நிகழ்வில் அவர்கள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.தமிழ்நாடு திரையரங்குகளில் படத்தை வெளியிடவிருக்கும் ரெட்ஜெய்ண்ட் நிறுவனத்தினருக்கே முறையாக அழைப்பு கொடுக்கப்படவில்லை என்பதால் அந்நிறுவனம் இந்நிகழ்வைப் புறக்கணித்துள்ளது. அதேபோல் வெளிநாடுகளில் இப்படத்தை வெளியிடும் உரிமை பெற்றுள்ள நிறுவனத்துக்கும் அழைப்பு கொடுக்காததால் அவர்களும் வருத்தத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அதேபோல, ஊடகங்களையும் இந்நிகழ்வுக்கு அழைக்கவில்லை. இந்நிகழ்ச்சி பிரத்யேகமாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் என்பதால் அழைக்கவில்லை என்கிறார்கள்.
ரஜினிகாந்த் நடித்துள்ள படம், சன் பிக்சர்ஸ் தயாரிப்பு ஆகியனவற்றோடு படம் நன்றாக இருந்தால் மக்கள் வரவேற்கப்போகிறார்கள் நடுவில் இவர்கள் எல்லாம் எதற்கு? என்கிற எண்ணத்தில் அந்நிறுவனம் இவ்வாறு நடந்துகொள்கிறது.
ஆனால்,ஒரு பொருளை தரமாக உற்பத்தி செய்தாலும் அப்பொருள் மக்களைச் சென்றடைய பல தரப்பினரின் ஒத்துழைப்பும் தேவை அப்படி இல்லாவிட்டால் அப்பொருள் முழுமையாக மக்களிடம் சென்றுசேராது.
இவற்றைத்தாண்டி, நம் வீட்டில் ஒரு விழா என்றால் உறவுகளையும் நட்புகளையும் அழைப்பது நம் பண்பாடு.
இவர்கள் வியாபாரமும் தெரியாமல் பண்பாடும் இல்லாமல் நடந்துகொள்கிறார்கள் என்று திரையுலகில் பலர் வருத்தப்படுகின்றனர்.











