நுழைவுச்சீட்டு விலை உயர்வுக் கோரிக்கை – திரையரங்குக்காரர்களே எதிர்ப்பு
திரையரங்குகளில் நுழைவுச்சீட்டுக் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள அனுமதி கோரி தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு அரசிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
மல்டிபிளக்ஸ் என்ப்படும் பல்திரைக்கூடங்கள், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் உள்ள திரையரங்குகள் மற்றும் ஐமேக்ஸ் எனப்படும் பெருந்திரை திரையரங்குகள் என வகைப்படுத்தி தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கட்டணம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதில், மல்டிப்ளக்ஸ் குளிர்சாதன வசதி திரையரங்குகளில் கட்டணம் ரூ.250 ஆகவும், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் உள்ள குளிர்சாதன திரையரங்குகளில் கட்டணம் ரூ.100-லிருந்து ரூ.200 ஆகவும், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் குளிர்சாதனம் இல்லாத திரையரங்குகளில் கட்டணம் ரூ.80-லிருந்து ரூ.120 ஆகவும் உயர்த்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு,தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மட்டுமின்றி திரையரங்க உரிமையாளர்களிடமிருந்தே எதிர்ப்பு வந்துள்ளது.
அவர்கள் இது குறித்துக் கூறுவதாவது…
இப்போது இருக்கிற கட்டணத்துக்கே பார்வையாளர்கள் வருவதில்லை, இப்போது இருக்கிற விலையைக் குறைத்தால் நல்லது. அப்படிச் செய்தால் கூட்டம் அதிகமாக வரும், வாகன நிறுத்ததில் ஒரு வருமானம் தீனிகள் விற்பதில் ஒரு வருமானம் என பல வகைகளில் வருமானம் கூடும். எனவே விலையைக் குறைக்க வேண்டும்.
ஏற்கெனெவே நிறைய திரையரங்குகள் மூடவேண்டிய அவலநிலையில் உள்ளது. இந்நிலையில் இந்த விலை உயர்வுக் கோரிக்கை தேவையில்லாதது.
சிறுபட தயாரிப்பாளர்களுக்கு இப்போது ஒரு காட்சி அல்லது இரண்டுகாட்சிகள் கிடைக்கின்றன. விலை உயர்த்தினால் அதுவும் கிடைக்காது.
நம் தொழிலை அழிக்க வேறு யாரும் தேவையில்லை, நாமே அழித்துக் கொள்வோம்
இப்படிப் பல வகையான கருத்துகள் திரையரங்கு உரிமையாளர்களிடமிருந்தே வருவது குறிப்பிடத்தக்கது.
இவற்றை திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கணக்கில் எடுக்குமா?











