சினிமா செய்திகள் நடிகை

ஸ்ரீதேவி உடல் இன்று தகனம், ஐம்பதாண்டு கலைப்பயணம் முடிவடைகிறது

துபாயில் பிப்ரவரி 20-ம் தேதி நடைபெற்ற உறவினர் திருமணத்தில் பங்கேற்க நடிகை ஸ்ரீதேவி, அவரது கணவர் போனி கபூர், இளைய மகள் குஷி ஆகியோர் அங்கு சென்றனர். மூத்த மகள் ஜான்வி இந்தி திரைப்பட படப்பிடிப்பு காரணமாக துபாய் செல்லவில்லை. மூன்று நாட்கள் நடைபெற்ற திருமண விழா நிறைவடைந்த பிறகு போனி கபூரும் மகள் குஷியும் மும்பைக்கு திரும்பிவிட்டனர்.

நடிகை ஸ்ரீதேவி மட்டும் துபாயில் உள்ள ஜுமைரா எமிரேட்ஸ் டவர்ஸ் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தார். பிப்ரவரி 24-ம் தேதி போனி கபூர் மீண்டும் துபாய் சென்றார். அன்று நள்ளிரவு 11.30 மணி அளவில் குளியலறைக்கு சென்ற ஸ்ரீதேவி மயங்கி விழுந்தார். நீண்ட நேரமாகவும் அவர் திரும்பாததால் போனி கபூரும் விடுதி ஊழியர்களும் அவரை மீட்டு அருகில் உள்ள ரஷித் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு ஸ்ரீதேவியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மாரடைப்பு காரணமாக ஸ்ரீதேவி உயிரிழந்துவிட்டார் என்று போனி கபூரின் சகோதரர் சஞ்சய் கபூர் ஊடகங்களிடம் கூறினார்.

இதைத் தொடர்ந்து ஸ்ரீதேவியின் உடல், உடல் கூறாய்வு செய்யப்பட்டது. இதில் அவர் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழக்கவில்லை. குளியலறைத் தொட்டியின் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டது. அவரது ரத்தத்தில் ஆல்கஹால் இருந்தது என்றும் உடல்கூறாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பாக போனி கபூரிடம் துபாய் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். ரஷித் மருத்துவமனை மருத்துவர்கள், உதவியாளர்கள், விடுதி ஊழியர்களிடமும் நீண்ட விசாரணை நடத்தப்பட்டது.

இதன் பிறகு இந்த வழக்கை மாஜிஸ்திரேட் விசாரணைக் குழுவிடம் துபாய் காவல்துறையினர் ஒப்படைத்தனர். அதன்பேரில் துபாய் அரசின் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீதேவியின் மரணம் குறித்து விசாரனை நடத்தினார். போனி கபூரிடம் எழுத்துபூர்வமாக வாக்குமூலம் பெறப்பட் டது. மாஜிஸ்திரேட் தரப்பு விசாரணை முடிவில், “குளியலறைக்குச் சென்றபோது சுயநினைவிழந்த ஸ்ரீதேவி எதிர்பாராதவிதமாக நீர் நிறைந்த தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்” என்று கூறி வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து பல்வேறு சட்ட நடைமுறைகளுக்குப் பிறகு ஸ்ரீதேவியின் உடல் பிப்ரவரி 27 பிற்பகல் போனி கபூர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடல் துபாயின் முஹைன்சாவில் உள்ள உடற்கூறு ஆய்வகத்தில் பதப்படுத்தப்பட்டது. இதற்கு ஒரு மணி நேரமானது. பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் துபாய் விமான நிலையத்துக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது.

ஸ்ரீதேவியின் உடலை எடுத்துச் செல்வதற்காக தொழிலதிபர் அனில் அம்பானி தனது சொந்த விமானத்தை கடந்த 25-ம் தேதியே துபாய்க்கு அனுப்பி வைத்தார். 13 இருக்கை வசதி கொண்ட அந்த விமானத்தில் ஸ்ரீதேவியின் உடல் பிப்ரவரி 27 இரவு மும்பைக்குக் கொண்டு வரப்பட்டது. கணவர் போனி கபூர், அவரது முதல் மனைவியின் மகன் அர்ஜுன் கபூர் ஆகியோர் அதே விமானத்தில் மும்பை வந்தனர். மும்பை விமான நிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீதேவியின் உடல் போனி கபூரின் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி, குஷி, கணவர் போனி கபூர், அய்யப்பன் குடும்பத்தினர் சார்பில் பிப்ரவரி 27 இரவு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது: நடிகை ஸ்ரீதேவியின் உடல், மும்பை அந்தேரி மேற்கு, லோகண்ட்வாலா காம்ப்ளக்ஸ், கார்டன் எண் 5 என்ற முகவரியில் உள்ள ‘செலிபிரேஷன் ஸ்போர்ட்ஸ் கிளபில்’ புதன்கிழமை காலை 9.30 மணி முதல் 12.30 வரை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும். இறுதி அஞ்சலி செலுத்த விரும்புவோர் காலை 9 மணிக்கே செலிபிரேஷன் ஸ்போர்ட்ஸ் கிளப் வளாகத்துக்கு வருகை தர வேண்டும். செல்போன், கேமரா எடுத்துச் செல்ல அனுமதியில்லை.

ஸ்ரீதேவியின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள் பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கும். வில்லே பார்லி மேற்கு, எஸ்.வி. சாலையில் உள்ள வில்லே பார்லி சேவா சமாஜ் தகன மையத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு உடல் தகனம் செய்யப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஐம்பதாண்டு காலமாக மக்களை மகிழ்விக்கும் கலைத்துறையில் கோலோச்சிய ஸ்ரீதேவியின் பூதவுடல் இன்று விடைபெறுகிறது. தலைமுறைகளைக் கடந்தும் அவர் புகழ் நிலைத்திருக்கும்.

Related Posts