கஸ்டடி – திரைப்பட விமர்சனம்
காவல்துறையில் கான்ஸ்டபிள் என்றழைக்கப்படும் கடைநிலைக்காவலர், மாநில முதலமைச்சர் சம்பந்தப்பட்ட வழக்கில் சிக்கிய குற்றவாளியை எதேச்சையாக கைது செய்கிறார். அந்தக் குற்றவாளியைக் கொலை செய்ய காவல்துறை உயரதிகாரி ஒருவர் அலைகிறார்.அவரை மீறி குற்றவாளியை நீதிமன்றத்தில் நிறுத்த காவலர் முனைகிறார். அந்த ஓட்டத்துக்கு நடுவே காவலரின் காதலியும் வீட்டைவிட்டு ஓடிவந்து காவலருடன் சேர்ந்துகொள்கிறார். அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதுதான் கஸ்டடி படம்.
காவலராக நடித்திருக்கிறார் நாகசைதன்யா. அவர் கதாநாயகன் என்பதால் காவல்துறை விதிமுறைகளைத் தாண்டி அவருடைய நியாயங்கள் இருக்கின்றன. அதை நிறைவேற்ற கடும் உழைப்பைச் செலுத்தியிருக்கிறார்.
நாயகி கீர்த்திஷெட்டியும் அவரோடு சேர்ந்த பாவத்துக்காக ஓடிக்கொண்டேயிருக்கிறார்.
குற்றவாளியாக நடித்திருக்கும் அரவிந்த்சாமியும் காவல்துறை உயரதிகாரியாக நடித்திருக்கும் சரத்குமாரும் படத்தில் முக்கியப் பங்காற்றியிருக்கிறார்கள்.
முதலமைச்சராக பிரியாமணி நடித்திருக்கிறார்.
நகைச்சுவைக்காக பிரேம்ஜியும் வெண்ணிலா கிஷோரும் இருக்கிறார்கள்.ஓரிரு இடங்களில் சிரிக்க வைக்கிறர்கள்.
எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவில் சண்டை மற்றும் துரத்தல் காட்சிகள் வேகமாக இருக்கின்றன.
இளையராஜாவும் யுவன்ஷங்கர்ராஜாவும் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள் என்பதற்கான சான்று பாடல்களில் இல்லை. பின்னணி இசை தாழ்வில்லை.
ஒருநாள் ஒருவாரம் என குறைந்த காலகட்டங்களில் நடக்கிற கதையாகத் தேர்ந்தெடுத்தால் வேகமும் விறுவிறுப்புமாக இருக்கும் என நினைத்திருக்கிறார் இயக்குநர் வெங்கட்பிரபு.
அவர் எண்ணம் ஈடேறவில்லை என்பதுதான் சோகம்.
– குமார்











