சினிமா செய்திகள்

அந்த சகவாசமே வேணாம் யு டர்ன் அடித்த ரஜினி

ரஜினிகாந்த் இப்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கும் ஜெயிலர் படப்பிடிப்பில் இருக்கிறார். அதோடு அவர் மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால்சலாம் படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்கவிருக்கிறார்.இந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

இவற்றைத் தொடர்ந்து லைகா நிறுவனத்துக்கு இன்னொரு படம் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த்.

அந்தப்படத்தை சிவகார்த்திகேயன் நடித்த டான் படத்தை இயக்கிய சிபிச்சக்ரவர்த்தி இயக்குவதாக இருந்தது.

ஆனால் அவர் சொன்ன கதை ரஜினிகாந்துக்குப் பிடிக்கவில்லை.அதோடு அவருடைய நடவடிக்கையும் சுத்தமாகப் பிடிக்கவில்லையாம்.
அதனால் சிபிச்சக்ரவர்த்தி வேண்டாம் என முடிவு செய்துவிட்டார்கள்.

அதன்பின், ரஜினிகாந்தின் அடுத்த படத்தை யாரை வைத்து இயக்குவது என்கிற கலந்துரையாடல் நடந்திருக்கிறது. அப்போது சில இளம்இயக்குநர்களின் பெயர் சொல்லப்பட்டதாம்.

அவற்றை ரஜினிகாந்த் அடியோடு நிராகரித்துவிட்டாராம்.

தற்போது அவரை இயக்கிக் கொண்டிருக்கும் நெல்சன் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறாராம் ரஜினி.

இன்னொரு இளம் இயக்குநரான சிபிச்சக்ரவர்த்தியும் அவரை நோகடித்துவிட்டார் என்கிறார்கள்.

இதனால் இளம்இயக்குநர்கள் சகவாசமே வேண்டாம், நம்மைப் பற்றி நன்கறிந்த நமக்கு மதிப்பு தரக்கூடிய இயக்குநர்களோடு மட்டுமே இனி பணியாற்றுவது என அவர் முடிவு செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இதனால் இயக்குநர் பி.வாசுவுக்கு, ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறதாம்.

அதனால் பெருமகிழ்ச்சியடைந்த பி.வாசு, ஒரு கதைக்கருவை ரஜினியிடம் சொல்லி அவர் சம்மதம் பெற்றுவிட்டாராம்.

அவர் தற்போது சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார்.

அதற்கு நடுவே வேறொரு குழுவை வைத்து ரஜினி படத்துக்கான திரைக்கதை உருவாக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கிறாராம்.

முழுமையான திரைக்கதை தயாரானதும் அதை ரஜினியிடம் சொல்லி அவர் ஒப்புதல் பெற்றுவிட்டால் அப்படம் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகிவிடும் என்கிறார்கள்.

Related Posts