விமர்சனம்

கட்சிக்காரன் – திரைப்பட விமர்சனம்

எல்லோராலும் எள்ளிநகையாடப்படுகிறவர்கள் அரசியல்கட்சித் தொண்டர்கள்.அவர்களைப் பற்றிப் பேசியிருக்கும் படம்தான் கட்சிக்காரன்.கட்சித் தலைவரின் மீது விசுவாசம் வைத்து உண்மையாக உழைத்து தனது வாழ்க்கையை இழந்த ஒரு தொண்டன்,அதே கட்சித் தலைவர் மூலம் பாதிப்பு நேரும்போது எதிர்த்து நின்று கேள்வி கேட்பதும் இழப்பீடு கேட்பதும்தான் கதை.

இந்தக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள விஜித் சரவணனின் அப்பாவி முகமும் வெள்ளந்தி குணமும் அவர் ஏற்றிருக்கும் பாத்திரத்துக்குப் பலமாக அமைந்திருக்கின்றன.

நாயகனின் மனைவி அஞ்சலியாக நடித்திருக்கும் ஸ்வேதா டாரதி,நடுத்தர வர்க்கத்து வாழ்க்கைப் போராட்டத்தை, கவலைகளை முகத்தில் காட்டுகிறார்.அந்தக் கிராமத்து முகமும் தோற்றமும் நேர்த்தி.அளவான அழகு,அளவான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார்.

மக்கள் கட்சித் தலைவராக வரும் சிவ சேனாதிபதி இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.அவரது உதவியாளராக வரும் அப்புகுட்டியும் தன் பங்கைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்.கதாநாயகனின் நண்பனாக வரும் தெனாலி அங்கங்கே சிரிக்க வைக்கிறார்.

சி.எம்.மகேந்திரா இசையில்,செங்குறிச்சி சின்ன பொண்ணு சிரிச்சாளே பாடலும்,கட்சிக்காரன் கட்சிக்காரன் ஆகிய இரண்டுபாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. வெவ்வேரு வகையான பாடல்கள் என்பதோடு கேட்டு இரசிக்கவும் முடிகிறது.பின்னனி இசை இரைச்சல்.

படத்தில் இடம்பெறும் பெரும்பாலான வசனங்கள் தற்கால அரசியல் விமர்சனங்களாக அமைந்திருக்கின்றன.ஆனால் திரைப்படம் என்பது காட்சி ஊடகம் என்பதை மறந்து எல்லாவற்றையும் வசனங்களிலேயே சொல்ல நினைத்திருப்பது சோகம்.

மதன்குமாரின் ஒளிப்பதிவில் காட்சிகளில் தெளிவு இருக்கிறது.

எழுதி இயக்கியிருக்கிறார் ப.ஐயப்பன். அரசியல்கட்சித் தொண்டர்களின் வாழ்க்கையைப் பற்றிப் பேசியிருக்கிறார். தலைவர்கள் செய்யும் தவறுகளைத் துணிச்சலாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

அதேசமயம், கட்சியில் உழைப்பது பதவிக்காக என்றும் அது கிடைக்கவில்லையென்றால் கட்சியை எதிர்த்துப் போராடவேண்டும் எனும் கருத்தைச் சொல்லியிருப்பதன் மூலம் அரசியல் குறித்து என்ன புரிதலைக் கொண்டிருக்கிறார் என்று தெரிகிறது.

அரசியலில் உழைப்பது ஒரு நிறுவனத்தில் உழைப்பது போன்றதன்று.அது ஒரு சேவை, எதிர்பார்ப்பற்ற தன்னலம் கருதாத மக்கள் தொண்டு என்பது புரியாமல் நடந்துகொள்ளும் இன்றைய அரசியல்வாதிகள் போலவே இயக்குநரும் சிந்தித்திருக்கிறார் என்பது சோகம்.

Related Posts