மீண்டும் விஷ்ணுவிஷால் ராம்குமார் கூட்டணி
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அருண்மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் தனுஷ். அப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
இதற்கு முன்பாக இந்நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் அவருடைய 43 ஆவது படத்தை முண்டாசுப்பட்டி, ராட்சசன் ஆகிய படங்களின் இயக்குநர் ராம்குமார் இயக்குவதாக முதலில் அறிவிக்கப்பட்டது.
2018 ஆம் ஆண்டு அக்டோபரில் ராட்சசன் படம் வெளியான சில நாட்களிலேயே ராம்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது.
அதன்பின் தனுஷின் 43 ஆவது படத்தை அவர் இயக்குகிறார், சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அதன்பின் 2020 பிப்ரவரி மாதம், தனுஷ் -ராம்குமார் திரைப்படம் மெகா பட்ஜெட் மற்றும் முன் தயாரிப்புப் பணிகளுக்காக அதிக நேரத்தேவை காரணமாக சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் “தனுஷ் 43 ” அந்த திரைப்படத்திற்கு முன்னதாக வெளியாகிறது என்று சொல்லியிருந்தார்கள்.
தனுஷ் 43 ஆக மாறன் படம் வெளியானது.
அதன்பின், ராம்குமார் தனுஷ் படம் நடக்காது என்று சொல்லிவிட்டார்கள்.
அதேசமயம் அதேநிறுவனத்துக்கு சிவகார்த்திகேயன் நடிக்கும் புதியபடத்தை ராம்குமார் இயக்குகிறார் என்கிற செய்திகள் வெளியாகின.
அதுவும் நடக்கவில்லை.
இப்போது,முண்டாசுப்பட்டி, ராட்சசன் ஆகிய படங்களைத் தொடர்ந்து மீண்டும் விஷ்ணுவிஷாலை வைத்தே அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார் ராம்குமார்.சத்யஜோதி நிறுவனமே தயாரிக்கிறது.
இதற்காக விஷ்ணுவிஷாலுக்கு முன் தொகை கொடுக்கப்பட்டு ஒப்பந்தம் செய்தாகிவிட்டதாம். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.










