தனுஷ் சொன்ன ஐ லவ் யூ – மாரிசெல்வராஜ் வெளிப்படுத்திய இரகசியம்
தனுஷ் நடித்திருக்கும் கர்ணன் படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க மாரி செல்வராஜ் இயக்கியிருக்கிறார் . சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பில் பாடல்கள் உருவாகி வெளியானது. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
அந்நிகழ்வில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பேசியதாவது…..
உளப்பூர்வமான, உணர்ச்சிபூர்வமான திரைக்காவியத்தை எடுத்துள்ளார் மாரி செல்வராஜ். நீங்கள் படம் பார்த்துவிட்டு இருக்கையை விட்டு வெளியே வராமல் சிந்திக்கும் படி இருக்கும் இப்படம். அத்தனை வேலையகளையும் தன் தோள்மேல் சுமந்த உழைப்பாளி இயக்குநர் மாரி செல்வராஜ். பாலுமகேந்திரா போன்ற இயக்குநர்கள் இல்லையே என்ற குறையை மாரி செல்வராஜ் போக்கி இருக்கிறார். வெற்றிமாறன் அவர்களை எப்படி பிடித்து வைத்திருக்கிறோமோ அதேபோல் மாரிசெல்வராஜ் அவர்களையும் பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். மாரி செல்வராஜை என்னிடம் அறிமுகப்படுத்தியது தனுஷ் தான். இந்தப் படத்தின் கதையை ஒரு புத்தகமாகக் கொடுத்துள்ளார் மாரி.அதை என் பூஜை அறையில் வைத்துள்ளேன். இந்தப் படத்தில் உழைத்த அத்தனை கலைஞர்களுக்கும் நன்றி .கர்ணன் வருவான், கர்ணன் வெல்வான் வாய்மையே வெல்லும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இயக்குநர் மாரி செல்வராஜ் பேசியதாவது…..,
கர்ணன் கதையைக் கேட்ட நாள் முதல், திரையில் தான் காண்பேன் என உறுதியாக இருக்கிறார் தாணு சார். கர்ணன் திரைப்படத்தை சுதந்திரமாக எடுக்க விட்டார்கள் பரியேறும் பெருமாள் படத்தையும் அப்படித்தான் எடுத்தேன். கர்ணன் திரைப்படத்தை கிராமத்துப் பகுதியில் எடுத்ததற்கான காரணம் படத்திற்கு உயிரோட்டம் கொடுக்கத்தான்.இப்படத்துக்காக நூறு வீடுகள் கொண்ட கிராமத்து செட் அமைக்கப்பட்டது. இப்படி அழகான ஒரு செட் அமைத்துக் கொடுத்த ஆர்ட் டைரக்டருக்கு என் நன்றிகள். ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் எனக்கு 12 ஆண்டுகால பழக்கம். மிகவும் நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இப்படத்தில் எனக்கென்று ஒரு தனிக்கவனம் எடுத்து இசை அமைத்துள்ளார்.இந்தப்படத்தில் என் கிராமத்து மக்கள் நிறையப் பேர் நடித்திருக்கிறார்கள்.அவர்களுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். இந்தப் படத்தில் என்னுடைய நடிப்பை மேலும் மெருகேற்றியது என்னுடன் கூட நடித்த அந்த ஊர் மக்களும் சக கலைஞர்கள் தான் என்று தனுஷ் சார் சொன்னார்.
அவருடைய உழைப்பு அளப்பரியது. ஆங்கிலப்படத்தில் நடிக்க அமெரிக்கா செல்லுமுன் இருந்த ஒரு நாளில், ஒரு பாடல் பாடினார், படத்தின் டப்பிங்கை முடித்தார்.அதன்பின் புகைப்படப்படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.அப்புறம், இந்தப் படத்தை தனுஷ் சார் பார்த்தபோது பதட்டமாக இருந்தது.படம் முடிந்ததும் நீங்கள் மேலும் பல உயரங்களுக்குப் போவீர்கள் என்றார். படம் பற்றி ஒண்ணும் சொல்லலியே என்றேன். இப்ப சொன்னது போதாதா? படம் சூப்பர், ஐ லவ் யூ என்றார்.
அதன்பின் தாணு சார் படம் பார்த்தபோது மிகவும் பயத்துடன் வெளியில் உட்கார்ந்திருந்தேன்.படம் முடியும் நேரத்தில் சட்டென உள்ளே நுழைந்தேன். தாணு சார் அழுதுகொண்டிருந்தார்.கிட்டே போனதும் என்னைக் கட்டி அணைத்து முத்தம் கொடுத்துப் பாராட்டினார்.அப்போதுதான் எனக்கு தெம்பு வந்தது.
பரியேறும் பெருமாள் படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற மீடியாவும் ஒரு காரணம். அதுபோல் கர்ணனுக்கும் உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.











