வட்டகரா – திரைப்பட விமர்சனம்
பெரும் தொழிலதிபர் அங்காடித் தெரு மகேஷ், மெக்கானிக் சதீஷ் சுப்பிரமணியம்,வாடகை மகிழுந்து ஓட்டுநர் சாரணேஷ்குமார், பாசமிகு தாத்தா கண்ணன் மாதவன் ஆகிய நால்வரும் எதிர்பாராமல் ஒன்றிணைகிறார்கள்.
நால்வருக்கும் ஆளுக்கொரு கதை இருக்கிறது. அதன்படி அவர்களுக்குப் பெரும் தொகை தேவை.
இதற்காகக் கொள்ளையடிக்கத் திட்டமிடுகிறார்கள். அவர்கள் நினைத்தது நடந்ததா? இல்லையா? என்பதுதான் வட்டகரா படம்.
வட்டகரா என்பது தூயதமிழ்ச் சொல் எனவும் அது பணத்தைக் குறிக்கிறது எனவும் விளக்கம் சொல்லியிருக்கிறார்கள்.
அங்காடித்தெரு மகேஷுக்கு பெரிய தொழிலதிபர் வேடம். அதற்கேற்ப கோட் சூட் போட்டுக்கொண்டு வருகிறார். கண் பார்வை போனபிறகு பார்வையற்றோர் உடல்மொழியை சரியாக வெளிப்படுத்துகிறார்.
விவசாயி மகன் என்றாலும் விவசாயத்தை வெறுப்பவராக வருகிறார் தயாரிப்பாளர் சதீஷ்சுப்பிரமணியம். அப்பாவிடம் சண்டை போடுவது எதிரிகளிடம் சண்டை போடுவது ஆகிய எல்லா இடங்களிலும் ஆக்ரோசத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.கடைசியில் விவசாயத்தை நேசிக்கும் காட்சிகளில் நெகிழ வைக்கிறார்.
பாசமிக்க தாத்தாவாக நடித்திருக்கும் கண்ணன் மாதவன், சிறப்பாக நடித்துப் படத்தை இலகுவாக நகர்த்துகிறார்.
வாடகை மகிழுந்து ஓட்டுநர் சாரணேஷின் கதை எதிர்பாராத முடிவைக் கொண்டிருப்பது சிறப்பு. நால்வரில் இவருக்குத்தான் நாயகி உண்டு.
படத்தில் ஒரேயொரு நாயகி அலிசா ஜார்ஜ். அவரும் சில காட்சிகளில் மட்டும் வருகிறார்.தேவையான அளவு நடித்திருக்கிறார்.
அரசியல்வாதியான கஜராஜ், ரவுடியாக சம்பத்ராம், அல்லக்கையாக பெஞ்சமின், விவசாயியாக ஆர்.எஸ்.சிவாஜி ஆகியோர் வருகின்றனர். எல்லோரும் பொருத்தமாக நடித்திருக்கின்றனர்.
தாஜ்நூர் இசையில் பாடல்கள் கேட்க நன்றாக இருக்கின்றன. அப்பா பற்றிய பாடல் கவனம் ஈர்க்கிறது.பின்னணி இசையில் படம் தொய்வின்றி நகர வைத்திருக்கிறார்.
ஜேசன் வில்லியம்ஸின் ஒளிப்பதிவு இயல்பாக அமைந்திருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் கே,பாரதிகண்ணன், ஒரு கதையில் உண்மைக்காதலையும், இன்னொரு கதையில் நட்பின் துரோகம் மற்றும் அதன் வலியையும், மூன்றாவது கதையில் விவசாயத்தின் மேன்மையையும் நான்காவது கதையில் பாசப்போராட்டத்தையும் சொல்லி அதனோடு அரசியல் தலைவர்களின் தேர்தல் கணக்கு, ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் எண்ணம் ஆகியனவற்றைச் சாடியிருக்கிறார்.











