சினிமா செய்திகள்

இது சிறந்த நகைச்சுவைப்படம் – சவரக்கத்தி இயக்குநர் ஜி.ஆர்.ஆதித்யா பேட்டி

பிப்ரவரி 9,2018 அன்று வெளியாக்விருக்கும் படம் சவரக்கத்தி. தமிழ்த்திரையுலகின் குறிப்பிடத்தக்க இயக்குநர்களான மிஷ்கின், ராம் ஆகியோர் நடித்திருப்பதால் இப்படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தின் இயக்குநர் ஜி.ஆர்.ஆதித்யா இயக்குநர் மிஷ்கினின் சொந்தத் தம்பி. சினிமாவலைக்காக  அவரிடம் உரையாடியதிலிருந்து….

  • நீங்கள் இயக்குநரானது பற்றி.?

சித்திரம் பேசுதடி படம் முடிந்த பின் மிஷ்கினிடம் உதவியாளராக சேரச் சென்றேன். அவர் என்னைக் கடுமையாகத் திட்டி அனுப்பிவிட்டார்.

இவரிடம் நிச்சயம் சேர்ந்துவிடுவோம் என்று நம்பி, பார்த்துக் கொண்டிருந்த வேலையையும் விட்டுவிட்டேன். மிஷ்கின் என்னை சேர்த்துக் கொள்ள மறுத்துவிட்டார். சினிமா ஆசையில் வேறு எங்கும் வேலைக்குப் போகவும் முடியவில்லை. பின்னர் இயக்குநர் பார்த்திபனிடம் சென்று உதவியாளராகச் சேர்ந்தேன்.

அதன் பின்னர் இயக்குநர்கள் ஹோசிமின், நந்தா பெரியசாமி, கே.எஸ். ரவிக்குமார் ஆகியோரிடம் . வேலை செய்தேன். பின்னர் ‘அஞ்சாதே’ படத்தை  இயக்கிய போது  என்னை மிஷ்கின் சேர்த்துக் கொண்டார். அந்தப் படத்தில் கடைசி உதவி இயக்குநராக வேலைக்குச் சேர்ந்தேன்.

தொடர்ந்து அவரிடம் “அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி” போன்ற படங்களிலும், சில படங்களின் ஸ்கிரிப்ட் வேலைகளிலும் அவருடன் இணைந்து பணியாற்றினேன். ‘முகமூடி’ படத்திற்குப் பிறகு தனியாக படம் இயக்க வேண்டும் என்று வாய்ப்புத் தேட ஆரம்பித்தேன்.

  • சவரக்கத்தி படம் பற்றி..?

முதல் படமாக ஒரு நகைச்சுவைப் படம்தான் இயக்க வேண்டும் என்று முடிவெடுத்து கதைகளைப் பேச ஆரம்பித்தேன். அப்போது அமைந்ததுதான் ‘சவரக் கத்தி’. நானும் ரவுடிதான் என்று பொய்யாகச் சொல்லி உதார் விடும் நாவிதராக ராமுக்கும் உண்மையிலேயே ரவுடியான மிஷ்கினுக்கும் இடையிலான உரசல்தான் படம்.

  • மிஷ்கின், ராம் ஆகியோரை நடிக்க வைத்தது எப்படி?

மிஷ்கின்  இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை எழுதிக் கொடுத்திருக்கிறார். எழுதி முடித்ததும் இந்தக்கதையில் இப்போது ராம் நடித்திருக்கும்  வேடத்தில் அவர் நடிக்கவேண்டும் என்று கேட்டேன். அவர் இந்த வேடத்தை எடுத்துக்கொண்டார், நாயகன் வேடத்துக்கு ராம் சரியாக இருப்பார் என்று அவரையும் கேட்டு சம்மதிக்க வைத்தேன்.

  • இருவரிடமும் வேலை வாங்கிய அனுபவம்..?

அது பெரிய வேலை என்று சொல்லமுடியாது மிகப்பெரிய வேலை. கதைக்குள் இருவரும் பொருந்தி வந்தார்கள் என்பதும்  இருவரின் உடல்மொழியைப் பற்றி  நான் நன்றாக அறிந்து வைத்திருந்ததும் இப்போது உதவியது.

இருவரும் சிறந்த இயக்குநர்கள். ஒரு ஷாட் இப்படி எடுக்கிறேன் என்று சொன்னால் “ஏன்..?”, “எதற்காக..?” என்று கேட்பார்கள். அவர்கள் ஒத்துக்கொள்ளும் அளவில் நான் அவர்களுக்கு விளக்கிச் சொல்ல வேண்டும்.

  • நாயகி பூர்ணா ?

படத்தில் ராமின் மனைவியாக  பூர்ணா நடித்திருக்கிறார். இந்தப்படத்துக்கான அவருடைய உழைப்பு மிகப்பெரிது. தான் ஒரு நடிகை என்பதைச் சுத்தமாக மறந்து கதாபாத்திரமாகவே மாறினார். அவரைத்தவிர வேறு யாரும் இவ்வேடத்தைச் சிறப்பாகச் செய்திருக்க முடியாது.

  • நடிகர் செல்வாவுக்கு இந்தப்படத்தில் சம்பந்தம் இருக்கிறதா?

செல்வா சார் எனக்கும் என் குடும்பத்துக்கும் மிகவும் வேண்டிய மனிதர். எங்கள் மீதுள்ள அன்பால் இந்தப்படத்துக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார்.

  • படம் பார்க்க அறிவாளியாக இருக்கவேண்டுமா?

அனைவரும் குடும்பத்துடன் வந்து பார்க்கும்படியான ஒரு கலகலப்பான படமாக இந்த ‘சவரக் கத்தி’ அமைந்திருக்கிறது. அனைத்துத் தரப்பு மக்களுக்கான படமாக இது இருக்கும்.

உங்கள் வெற்றிக்கு வாழ்த்துகள் ஜி.ஆர்.ஆதித்யா.

Related Posts