பிரசாந்த் இசைத்த பியானோ மெய்மறந்த படக்குழு – அந்தகன் அனுபவங்களைப் பகிர்கிறார் தியாகராஜன்
2018 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி வெளியான இந்திப்படம் அந்தாதூன். ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த அந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், சிறந்த இந்திப் படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகியவற்றுக்கான தேசிய விருதுகளையும் வென்றது.
அப்படத்தின் தமிழாக்கமாக உருவாகியிருக்கும் படம்தான் அந்தகன்.நடிகரும் இயக்குநருமான தியாகராஜன் இயக்கத்தில், பிரசாந்த்,சிம்ரன்,பிரியா ஆனந்த், கார்த்திக், ஊர்வசி உட்பட பலரை நடித்துள்ள இந்தப்படம் ஜூலை 1 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் அப்படத்தின் இயக்குநர் தியாகராஜனுடன் ஓர் உரையாடல்….
1.அந்தாதூன் படத்தைத் தேர்ந்தெடுத்தது ஏன்?
பிரசாந்தின் நிஜமான திறமைகளையும் வெளிப்படுத்தக் கூடிய கதாபாத்திரங்களை வைத்துப் படமெடுப்பது என் வழக்கம். அந்த வரிசையில் இந்தப் படம் சேரும். இந்தப்படத்தின் நாயகன் ஒரு பியானோ இசைக்கலைஞன். பிரசாந்தும் பியானோ இசையில் புலமை பெற்றவர். அதையும் வெளிப்படுத்த நல்வாய்ப்பு அமைந்ததால் இந்தப்படத்தை எடுத்தேன்.

andhagan prasanth
2.படப்பிடிப்பில் நிஜமாகவே பியானோ வாசித்தாரா?
ஆம், படத்தில் நான்கு முக்கிய இடங்களில் அவர் பியானோ வாசிக்கிற மாதிரி காட்சிகள் இருக்கின்றன. அதற்காக பழங்கால பியானோ உட்பட நான்கு பியானோக்களை வாங்கிப் பயன்படுத்தினோம். படப்பிடிப்பின்போது பியானோ வாசிக்கவேண்டும் என்று சொன்னதும் அவர் வாசிக்கத் தொடங்கிவிடுவார். படக்குழுவினர் அனைவரும் அந்த இசைக்கு மெய்மறந்து கைதட்டிப் பாராட்டினர். நான் மிகவும் நெகிழ்ந்த தருணங்கள் அவை.
3.தமிழுக்கேற்ப படத்தில் மாற்றங்கள் செய்துள்ளீர்களா?
ஆம், நல்ல நடிகர்கள் நமக்கு அமைந்தார்கள். அவர்கள் நடிப்புக்காகவே சில காட்சிகளைச் சேர்த்தோம்.
4.அப்படியானால் படப்பிடிப்பு நேரத்தில்தான் கூடுதல் காட்சிகளைச் சேர்த்தீர்களா?
முன்கூட்டியே கூடுதல் காட்சிகளுடன் முழுமையான திரைக்கதை எழுதிக்கொண்டுதான் படப்பிடிப்புக்குச் சென்றோம். படப்பிடிப்புத்தளத்தில் தேவைக்கேற்ப சிலவற்றைச் சேர்த்தோம்.
5.இந்திப்படத்தில் தபுவின் நடிப்பு மிகவும் பேசப்பட்டது. இங்கு சிம்ரன் அதற்கு இணையாக நடித்துள்ளாரா?
தபுவெல்லாம் ஒன்றுமே இல்லை என்று சொல்லுமளவுக்கு நடிப்பில் வெளுத்துவாங்கியுள்ளார் சிம்ரன். இந்தப் படத்தில் நடித்ததற்காக அவருக்குப் பல விருதுகள் கிடைக்கும் பாருங்கள்.
6.படம் முழுமையாகத் தயாராகியும் ஜூலை 1 வெளீயீடு என தள்ளிவைத்தது ஏன்?
இப்போதெல்லாம் படங்களை வெளியிடும் காலமும் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கின்றன. எங்கள் முந்தைய படங்களான ஜானி, சாகசம் ஆகியன சரியான வெளீயீட்டுத் தேதி இல்லாததாலேயே அதற்குரிய மதிப்பைப் பெறவில்லை. இப்படத்தில் அந்தத் தப்பு வந்துவிடக்கூடாது என்பதற்காக ரிலீஸ் தேதியைத் தள்ளிவைத்தோம்.
7.நீங்கள் ஹாலிவுட் படமொன்றில் நாயகனாக நடிக்கிறீர்களாமே?
அந்தகன் படவெயீட்டுக்குப் பின் அந்தப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவேண்டும். டெட்லிகோஸ்ட் என்பது அந்தப்படத்தின் பெயர். பிரான்ஸைச் சேர்ந்த ஹாலிவுட் இயக்குநர் இயக்குகிறார். இப்போதைக்கு இவ்வளவு போதும்.
8.அந்தகன் படத்துக்கு அடுத்து தமிழில் என்ன செய்கிறீர்கள்..?
பிரசாந்த் அமிதாப்பச்சன் ஆகியோர் நடிக்கும் சல்யூட் எனும் படத்தைத் தொடங்கத் திட்டமிட்டிருக்கிறேன். அப்படம் பற்றிய விவரங்களையும் பிறகு சொல்கிறேன்.
9.பிரசாந்த் உங்கள் மகன் என்பதால் கூடுதல் சலுகைகள் எடுத்துக்கொள்கிறீர்களோ?
ஒரு கதாநாயகனுக்குச் சரியான கதை அமைந்தால் அவரை வைத்துப் படமெடுப்பது இயக்குநர்களின் வழக்கம். அதன்படி அவருக்கான கதைகளைத் தேர்ந்தெடுத்து இயக்குகிறேன். அதில் அவரும் ஈடுபாட்டுடன் நடிக்கிறார்.
10.வேறு தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் அணுகியும் பிரசாந்த் அவற்றை ஒப்புக்கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறதே?
நிறையப் பேர் கேட்பது உண்மைதான். அவற்றில் பொருத்தமான சிலவற்றை அவர் தேர்ந்தெடுத்தும் வைத்திருக்கிறார். அவை பற்றிய அறிவிப்புகள் அடுத்தடுத்து வரும்.
– அன்பு











