பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வந்திருக்கும் இயக்குநர்
அஜீத்குமார் நடிப்பில் வெளியான ‘சிட்டிசன்’ மற்றும் ஷாம் நடித்த ‘ஏபிசிடி’ ஆகிய படங்களை இயக்கியவர் ஷரவண சுப்பையா. பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கும் படம் மீண்டும்.
‘மீண்டும்’ படத்தில் நாயகனாக கதிரவன் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அனைகா நடித்திருக்கிறார். இவர் ‘டிக்கிலோனா’, ‘நட்பே துணை’ ஆகிய படங்களில் நடித்தவர்.
மேலும்,இயக்குநர் ஷரவண சுப்பையா, பிரணவ் ராயன், அனுராதா, துரை சுதாகர், சுபா பாண்டியன், அபிதா செட்டி, யார் கண்ணன், எஸ்.எஸ்.ஸ்டான்லி, சுப்ரமணியம் சிவா, தர்ஷினி, இந்துமதி, மணிகண்டன், கேபிள் சங்கர், ஆதர்ஷ், மோனிஷா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.
கவிஞர் வைரமுத்து பாடல்கள் எழுதி உள்ளார். நரேன் பாலகுமாரன் இசை அமைத்திருக்கிறார். சீனிவாசன் தேவாம்சம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராஜா முகமது படத் தொகுப்பு செய்திருக்கிறார். சூப்பர் சுப்பராயன் சண்டை பயிற்சி அளித்திருக்கிறார். மணிமொழியன் ராமதுரை அரங்கம் அமைத்திருக்கிறார். நடன இயக்கத்தை ராதிகா அமைத்துள்ளார்.
இரண்டு தந்தை, ஒரு பெண் ஒரு குழந்தை என்ற மாறுபட்ட கதையம்சமுள்ள இப்படத்தில் சிங்களக் கடற்படையினரிடம் சிக்கி தமிழ் மீனவர்கள் படும் சித்ரவதையை தத்ரூபமாகப் படமாக்கி உள்ளனர்.
இந்தியா மீது மறைமுக தாக்குதல் நடத்தும் இலங்கை, சீனா பாகிஸ்தான் போன்ற நாடுகளின் விஞ்ஞான ரீதியான தாக்குதலையும் இப்படத்தில் சொல்லியிருக்கின்றனர்.
கதாநாயகன் கதிரவன் இப்படத்தின் சண்டைக் காட்சிகளில் உயிரைப் பணயம் வைத்து நடித்துள்ளார். சிங்கள ராணுவத்தினரால் சித்ரவதை செய்யப்படும் காட்சிகளில் நிர்வாணமாக நடித்திருக்கிறார்.
இப்படத்தை ஹீரோ சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சி.மணிகண்டன் தயாரித்திருக்கிறார்,
இப்படத்தின் முன்னோட்டம் வெளியீட்டுவிழா டிசம்பர் 17 அன்று நடைபெற்றது. விழாவில், இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், பேரரசு, பேச்சாளர்கள் திண்டுக்கல் லியோனி, நாஞ்சில் சம்பத், ஊடகவியலாளர் ரங்கராஜ்பாண்டே உள்ளிட்டோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்திப் பேசினர்.











