இரண்டு கோடி சம்பளம் குறைத்த விஷால்
எனிமி படத்தைத் தொடர்ந்து புது இயக்குநர் து.பா.சரவணன் இயக்கும் வீரமே வாகை சூடும் படத்தில் நடித்திருக்கிறார். விஷாலின் 31 ஆவது படமான இதை விஷால் ஃபிலிம் பேக்டரி நிறுவனமே தயாரித்திருக்கிறது.
லத்தி எனப்பெயரிடப்பட்டிருக்கும் விஷாலின் 32 ஆவது படத்தை வினோத்குமார் எனும் புதியவர் இயக்குகிறார். அதை விஷாலின் நெருங்கிய நண்பர்களான நடிகர் நந்தாவும் நடிகர் ரமணாவும் இணைந்து தயாரிக்கிறார்கள்.
விஷாலின் 33 ஆவது படத்தை எனிமி படத்தின் தயாரிப்பாளர் வினோத் தயாரிக்கிறார் என்றும் அப்படத்தை ஆதிக்ரவிச்சந்திரன் இயக்குகிறார் என்றும் அண்மையில் அறிவிக்கப்பட்டது.
படத்தின் நாயகி மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடந்துவருகிறது என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
முன்னதாக, எனிமி படம் நட்டம் என்பதால் புதிய படத்துக்கு விஷால் கேட்கும் சம்பளத்தைத் தரமுடியாது, சம்பளத்தைக் குறைத்தாக வேண்டும் என்று தயாரிப்புத் தரப்பில் சொல்லப்பட்டதாம். முதலில் சம்பளம் குறைப்பதை ஒப்புக்கொள்ளாத விஷால், பின்பு பேசிய சம்பளத்திலிருந்து இரண்டு கோடி ரூபாய் குறைக்க ஒப்புக்கொண்டாராம்.
அதன்பின்பே படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதாம்.
முதலில் 15 கோடி சம்பளம் என்று பேசப்பட்டதாகவும் இப்போது 13 கோடி ஆகியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.











