ரூ 2000 – திரைப்பட விமர்சனம்
2016 நவம்பர் 8 ஆம் நாள் அதுவரை புழக்கத்தில் இருந்த 1000 ரூபாய் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாதென அறிவித்தார் பிரதமர் மோடி.
அதைத் தொடர்ந்து சில மாதங்கள் இந்திய ஒன்றியமே அல்லோல கல்லோலப்பட்டது.
வழக்கம்போல் பெருமுதலாளிகளும் பெரும் பணக்கார்களும் தப்பித்துக்கொள்ள எளிய மனிதர்கள் ஏராளமாய் வதைபட்டார்கள்.
அக்கொடிய காலகட்டத்தை மீண்டும் நம் கண்முன் நிறுத்தியிருக்கிறது ரூ2000 படம்.
புதிய ரூபாய்த்தாள்களை அறிமுகம் செய்ததுமே அவற்றில் பேனா, பென்சில் ஆகியனவற்றால் எழுதினால் அவை செல்லாது எனவும் அறிவித்தார்கள்.
அதை மட்டுமே கருவியாக எடுத்துக்கொண்டு அதிகாரவர்க்கத்துக்கெதிராகப் பெரும் போர் நடத்தியிருக்கிறது படம்.
படத்தில் பாதிக்கப்பட்ட விவசாயியாக நடித்திருக்கும் அய்யநாதனுக்காக வழக்காடும் வழக்கறிஞராக நடித்திருக்கிறார் பாரதி கிருஷ்ணகுமார்.
அவர் எடுத்து வைக்கும் வாதங்கள் கேள்விகள் ஒவ்வோன்றும் சம்மட்டி அடி.
இந்திய ஒன்றியத்தில் எவ்வளவு ஏடிஎம் மையங்கள் உள்ளன?, அவற்றைக் கையாள்வது யார்? அவற்றில் பணம் நிரப்பப்படுவது எப்படி? அம்மையங்களில் வரும் அழுக்கு மற்றும் கிழிந்த தாள்களுக்கு எவர் பொறுப்பு? என்பனவற்றோடு ரூபாய்தாள் என்றால் என்ன? என்பது பற்றியும் மிகத் தெளிவாக, விளக்கமாக வகுப்பறையில் பாடம் நடத்தும் நல்லாசிரியரின் பொறுப்புணர்ச்சியோடு நடித்து தோழர்பாலன் என்கிற வேடத்துக்குப் பெருமை சேர்த்திருக்கிறார் பாரதி கிருஷ்ணகுமார்.
நீதிமன்றத்தின் சாட்சிக்கூண்டில் அவர்முன் அதிகாரவர்க்கத்தினர் தலைகுனிந்து நிற்பதும் அவர் கம்பீரமாகத் தலைநிமிர்ந்து பேசுவதுமான காட்சிகள் சிறப்பு.
அவருடைய உதவியாளர் மற்றும் ஆணவக்கொலையால் மனைவியை இழந்து தவிக்கும் வேடத்தில் நடித்திருக்கும்
ருத்ரன் பராசு பொருத்தமாக நடித்திருக்கிறார்.
தமிழகத்தை உலுக்கிய உடுமலை கவுசல்யா – சங்கரை நினைவு படுத்தும் கதையை வைத்துக்கொண்டு சாதீயர்களுக்குச் சாட்டையடி கொடுத்திருக்கிறார்கள்.
இன்னொரு உதவியாளராக நடித்திருக்கும் ஷர்னிகா, அரசு வழக்குரைஞராக வரும் கராத்தே’வெங்கடேஷ்,நீதிபதிகளாக வரும் ஓவியா,தியாகு ஆகியோர் இயல்பாக இருக்கிறார்கள்.
இனியவன் பின்னணி இசை மூலம் காட்சிகளின் உணர்வுகளை வெளிப்படுத்த முயன்றிருக்கிறார்.
படத்தொகுப்பாளர் லட்சுமணனுக்கு சவாலான வேலை. ஏதாவது ஒரு காட்சியைக் கத்தரித்தால் ஒரு நல்ல கருத்து விடுபட்டுப் போய்விடுமே என்கிற பதட்டத்திலேயே எல்லாவற்றையும் விட்டுவிட்டார்.
ஒளிப்பதிவாளர் பிரிமூஸ் தாஸுக்கு. படம் வசனங்களால் நிரம்பியிருப்பதால் அதிக வேலை இல்லை.
எழுதி இயக்கியிருக்கும் ருத்ரனின் துணிவு அபாரம்.
பொழுதுபோக்குக்கலையை கேள்வி எழுப்பும் அவையாக்கியிருக்கிறார்.
படத்தில் ஒரு வழக்குக்கு இரண்டு வழக்குகளை நடத்தி பொருளாதாரம் மற்றும் சமுதாயப்பாடம் எடுத்திருக்கிறார்.
நிஜத்தில் மரணதண்டனைக்கு எதிராகப் போராடிக்கொண்டிருக்கும் தியாகுவை மரணதண்டனை கொடுக்கும் நீதிபதியாக நடிக்க வைத்திருப்பது முரண்.
படத்துக்கு ஏராள வெட்டுகள் கிடைத்திருக்கிறது போலும். அவை கதையோட்டத்தைப் பாதிக்காவண்ணம் படத்தைக் கொடுத்திருக்கிறார்.
காட்சி ஊடகம் என்பதை மறந்து வசனங்களில் மட்டுமே படம் நகர்வது குறை.ஆனாலும் உரையாடல்களில் பிறமொழிக் கலப்பைப் பெருமளவில் தவிர்த்து தமிழ் மட்டுமே கேட்கவைத்திருப்பது இனிமை.
இந்தத் திரைக்கதை மற்றும் வசனங்களுக்கான அவருடைய உழைப்பு பிரமிப்பு.
படமன்று பாடம்.அனைவரும் கேட்க வேண்டிய பாடம்.











