நாய் சேகர் பெயர் யாருக்கு? – சதீஷ் படக்குழு புதியவிளக்கம்
ஒரு இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நடிக்க வருகிறார். அவர் கதாநாயகனாக நடிக்கவிருக்கும் படத்தை சுராஜ் இயக்குகிறார்.லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
அந்தப்படத்துக்கு நாய்சேகர் என்று பெயர் வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
அதேநேரம்,
நகைச்சுவை நடிகர் சதீஷ் கதையின் நாயகனாகவும் ‘குக் வித் கோமாளி’ உள்ளிட்ட சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மனம் கவர்ந்த பவித்ரா லட்சுமி கதாநாயகியாகவும் நடிக்கும் புதியபடமொன்று தயாராகியுள்ளது.
அந்தப்படத்தில், ஜார்ஜ் மரியன், இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், இளவரசு, லிவிங்ஸ்டன், ஞானசம்பந்தன் மற்றும் ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
பல குறும்படங்கள் மற்றும் விளம்பரப் படங்களை இயக்கியவரும், யார்க்கர் ஃபிலிம்ஸ் எனும் யூடியூப் சேனலை நடத்தி வருபவருமான கிஷோர் ராஜ்குமார் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனங்களை எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார்.
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்டின் 21 ஆவது படைப்பாகத் தயாராகியுள்ளது.
இந்தப்படத்தின் பெயர் நாய்சேகர்.
படப்பிடிப்பை முழுமையாக முடித்துவிட்டு படத்தின் விளம்பரங்களைத் தொடங்கும்போது பெயரை அறிவிக்கலாம் என்று படக்குழுவினர் இருக்கின்றனர்.
இந்நிலையில்தான், என்னுடைய அடுத்த படம் நாய்சேகர் என்று வடிவேலு பேட்டி கொடுத்துக்கொண்டிருக்கிறார்.
ஆனால், இப்படத்தின் பெயரை முறைப்படி பதிவு செய்து படத்தைத் தயாரித்திருக்கிறது ஏஜிஎஸ் நிறுவனம். அவர்களிடம் இப்பெயர் இருப்பதை அறிந்த வடிவேலு, இப்பெயரை என் படத்துக்காக விட்டுக்கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார். ஆனால், அநதப்படத்தின் கதைப்படி பெயர் முக்கியமானதாக இருக்கிறது என்பதை ஏஜிஎஸ் நிறுவனம் சொல்லிவிட்டதாம்.
எப்படியெனில்? படத்தில் ஒரு நாய் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறது என்கிறார்கள்.
அதன்பின்னும், நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் என்னுடைய அடுத்த படத்தின் பெயர் நாய்சேகர், இந்தப்பெயரைப் பதிவு செய்து வைத்திருப்பதாகச் சொல்லப்படும் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடக்கிறது. அந்தப்பெயர் எங்களுக்கே கிடைக்கும் என்று சுராஜ் சொல்கிறார்.
இதுகுறித்து சதீஷ் படக்குழு தரப்பில் விசாரித்தால்,
இந்தப்பெயர் எங்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை அவர்களிடம் சொல்லி வடிவமைப்பைக் கூடக் காட்டிவிட்டோம். அதன்பின்பும் அவர்கள் ஏன் இப்படிச் சொல்கிறார்கள்? எனத் தெரியவில்லை.
இதில் இன்னொரு முக்கிய செய்தி என்னவென்றால், இந்தப் பெயரை ஸ்டுடியோகிரின் நிறுவனம்தான் பதிவு செய்து வைத்திருந்தது.
அவர்களிடமிருந்து தான் நாங்கள் இந்தப்பெயரை வாங்கியிருக்கிறோம். அப்படியிருக்கும் போது இன்னொருவருக்கு எப்படி நாங்கள் தரமுடியும்? அதனால் இந்தப்பெயரை நாங்கள்தான் வைக்கவேண்டும் அப்படியே இல்லையென்றாலும் நாங்கள் ஸ்டுடியோ கிரின் நிறுவனத்திடம்தான் திருப்பிக் கொடுத்தாகவேண்டும் என்கிறார்கள்.
என்ன நடக்கிறதெனப் பார்ப்போம்?











