வலுவடையும் ஆர்யா மீதான புகார் – முன் ஜாமீன் கோரும் உதவியாளர்
நடிகர் ஆர்யா ஜெர்மனியில் சுகாதாரத்துறையில் பணிபுரியும் ஈழத்தமிழ் பெண் விட்ஜாவிடம், 3 வருடங்களாகப் பழகி, விட்ஜாவைக் காதலிப்பது போல நடித்து, திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி 70 இலட்சத்து 40,000 ரூபாயை வெஸ்டர்ன் யூனியன் மணிடிரான்ஸ்பர் மூலம் பெற்றுக் கொண்டுள்ளார்.
ஆனால், அதன் பின் அவரைத் திருமணம் செய்து கொள்ளாமலும், பணத்தைத் திருப்பிக் கொடுக்காமலும் ஏமாற்றி வந்துள்ளார். இதனால் அவர் தன்னை ஏமாற்றிவிட்டதாகக் கூறி, பிரதமர் அலுவலகத்திற்கு புகார் வந்ததால், அந்தப் புகார் பற்றிய தகவல்கள் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அந்தப் புகாரில், உன்னை நான் விரும்புகிறேன். திருமணம் செய்து கொள்ளவும் ஆசைப்படுகிறேன் என்று கூறி தன்னிடம் இருந்து பணத்தைப் பெற்றதாகவும் சில மாதங்கள் கழித்து தன்னைப் போல பல பெண்களை அவர் ஏமாற்றியுள்ளது தனக்குத் தெரிய வந்ததால், கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டேன்.அதற்கு, ஆர்யாவின் தாயார் என்னை மோசமாகத் திட்டியதுடன், ஸ்ரீலங்காகாரி நீ…உலகமெல்லாம் போய் அசிங்கப்படுறீங்க என்று மோசமான வார்த்தைகளால் திட்டியதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இந்தப்புகார் தொடர்பாக பெருநகர சென்னை காவல்துறையினர் விசாரணையைத் தாமதப்படுத்தி வந்த நிலையில் ஆர்யா மீதான மோசடி புகார் தொடர்பான விசாரணையை விரைவுபடுத்தக்கோரி ஈழத்தமிழ்ப் பெண் சார்பாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பட்டாபிராம் ஆனந்தன் நீதிமன்றத்தை நாடினார்.
இதையடுத்து ஆர்யா மீதான மோசடி புகாரை விசாரிக்கும் பொறுப்பு சிபிசிஐடி காவல்துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டது.
ஆர்யா மீதான பண மோசடி புகாருக்கு ஆதாரமாக வாட்ஸ் அப் சாட்டிங், குரல் பதிவுகள் உள்ளிட்ட 70 பக்க ஆவணங்களை சிபிசிஐடி காவல்துறையினர் சேகரித்துள்ளனர்.
இதற்கிடையே சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்து விடுவார்கள் என்ற அச்சத்தில் ஆர்யாவின் உதவியாளர் முகமது அர்மான் முன் ஜாமீன் மனுதாக்கல் செய்துள்ளார். நிஜத்தில் ஜம்சத் என்ற பெயரில் உள்ள ஆர்யா காவல்துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாகக் கூறப்படுகின்றது.
விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக உள்ள ஆர்யாவைப் பிடித்து விசாரிக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.










