ஆஸ்கர் விருதுக்குச் செல்லும் விஜய்சேதுபதி படம்?
மணிமாறன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, ரம்யா உட்பட பலர் நடித்துள்ள படம் சங்கத்தலைவன். பாரதிநாதன் எழுதிய த்றியுடன் என்கிற நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் இந்தப்படம் பிப்ரவரி 26 அன்று வெளியாகவிருக்கிறது.
இதையொட்டி வெற்றிமாறன், மணிமாறன் ஆகியோரின் நண்பரும் காத்திரமான படைப்பாளியுமான தங்கம் வெளியிட்டிருக்கும் முகநூல் பதிவில் இன்னொரு முக்கியமான தகவல் வெளிப்பட்டிருக்கிறது.
அவருடைய முகநூல் பதிவில்…
“கொரோனாவின் தாக்கத்தால் நிலைகுலைந்திராத நாடோ, தொழிலோ, குடும்பமோ, தனிமனிதரோ, வாழ்க்கையோ …. இந்தப் புவியில் எங்கேனும் உண்டா?” என்றால், “இல்லை” என்பதே விடை.
தமிழ்த் திரைப்படத்துறை அவ்வாறு நிலைகுலைந்தபோது பாதிப்புக்குள்ளான – படங்களுள் ஒன்று சங்கத்தலைவன்; திரைப்பட நிறுவனங்களுள் ஒன்று கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி(GRASS ROOT FILM COMPANY); இயக்குநர்களுள் ஒருவர் மணிமாறன்; தயாரிப்பாளர்களுள் ஒருவர் – வெற்றிமாறன்!
நிலைகுலைந்திருந்த தொழில்துறை நிமிர்ந்துகொண்டிருக்கிறது. எனவே, 26. 02. 2021 அன்று வெளியாகவிருக்கிறது சங்கத்தலைவன்.
உண்மையில் திட்டமிடப்பட்டது என்னவோ, சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடுவது என்று! ஆனால் சென்ற ஆண்டு மார்ச் 23ஆம் தேதி முதல் பொது முடக்கம் நடைமுறை ஆகியதால், திட்டமிட்டபடி படத்தை வெளியிட முடியவில்லை.
சங்கத்தலைவனின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்ற ஆண்டு (2020) பிப்ரவரி 20ஆம் நாள் சாலிகிராமம் பிரசாத் லேபில் நிகழ்ந்தேறிவிட்டது. சென்ற ஆண்டுத் திட்டம் என்னவெனில், ‘இசை வெளியீட்டுக்குப் பின்னர் தனியாக ஒரு பாடலை சிறப்பு வெளியீடாகக் கொணர்வது; அதன் பின்னர் திரைப்பட வெளியீடு’ என்பதாகும். ஆனால் திட்டங்களைக் குலைத்துவிட்டது கொரோனா.
அந்த சிறப்புப் பாடல் இப்பொழுது, 21.02.2021 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது.
வெற்றிமாறன் தற்போது இயக்கிக் கொண்டிருக்கிற திரைப்படத்தில், தமிழ்த் திரைப்படங்களில் இதுவரை கண்டிராததொரு ஆளுமை மிக்க கதாபாத்திரத்தை ஏற்று நடித்துக்கொண்டிருக்கும் விஜய் சேதுபதி பாடலை வெளியிட்டிருக்கிறார். வெற்றிமாறனின் முந்தைய சாதனைகளை முறியடிக்கவிருக்கிற படமாகவும், ‘Best Foreign Language Film’ category யில் ஆஸ்கார் அனுப்புவதற்குத் தகுதியுடைய படமாகவும் உருப்பெற்று வருகிற ‘துணைவன்’ படத்தின் நாயகன் விஜய் சேதுபதி, சங்கத்தலைவனுக்குத் துணைவனாக நின்றிருக்கிறார்.
‘போராட்டம் ஒன்றாலே முன்னேறும் மக்கள் கூட்டமே;
போராட்டம் இல்லாமல் வராது மண்ணில் மாற்றமே’ என்ற பல்லவியுடன் தொடங்குகிற பாடலை வெளியிட்டிருக்கிறார்.
தொடுப்பு :
https://youtu.be/Fznic6DVozQ.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதில், வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்துக் கொண்டிருக்கும் புதிய படம் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பும் தகுதியுடன் உருவாகிக் கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
உலக அளவிலான விருதுகள் பெறத் தகுதியான இயக்குநரான வெற்றிமாறன் படம் குறித்து இப்படி ஒரு தகவல் வந்திருப்பதால் அது நடந்தேறும் சாத்தியம் இருக்கிறது.











