விஷாலை வற்புறுத்தும் சுந்தர்.சி – எதற்காகத் தெரியுமா?
2021 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்காக இப்போதே அனைத்துக் கட்சிகளும் தங்களை வலுப்படுத்திக் கொள்ளும் பணியில் இறங்கியுள்ளனர். இதில் முதலாவதாக பாஜகவில் பல்வேறு தமிழ்த் திரையுலகினர் இணைந்துள்ளனர். அவர்கள் அனைவருக்குமே பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வரிசையில் நடிகர் விஷாலும் பாஜக கட்சியில் இணையவுள்ளார் என்று சொல்லப்பட்டது.செப்டம்பர் 13 அன்று காலை பாஜக கட்சியில் விஷால் இணையவுள்ளார் என்றும், இதற்காக தமிழக பாஜக தலைவர் எல்.முருகனிடம் நேரம் கேட்டுள்ளதாகவும் கூட செய்திகள் வெளியாகின.
அப்போது பாஜகவில் சேர உள்ளதாக வெளியான தகவலுக்கு விஷால் மறுப்பு தெரிவித்தார். அதோடு அப்பேச்சு அடங்கிவிட்டது.
இப்போது விஷால் ஆனந்த்ஷங்கர் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்துவருகிறது.
விஷால் படப்பிடிப்புக்கு நடுவே அவரைச் சந்தித்திருக்கிறார் இயக்குநர் சுந்தர்.சி. அவர்கள் இருவரும் இணைந்து மீண்டும் படமெடுக்கப் போகிறார்கள் என்று நினைத்தால் இல்லையாம்.
விஷாலை பாஜகவில் சேரச் சொல்லி வற்புத்திவருவதாகச் சொல்லப்படுகிறது. விஷாலுக்கு இருக்கும் கடன் சிக்கல் உட்பட எல்லாச் சிக்கல்களையும் தீர்த்துவிடலாம் என்று சொல்லி அவரை பாஜகவில் இணைக்க முயன்று வருகிறார் என்கிறார்கள்.
ஏற்கெனவே குஷ்பு பாஜகவில் சேர்ந்ததற்கு சுந்தர்.சி தான் காரணம் என்று சொல்லப்பட்டது.அதை உறுதிப்படுத்தும் விதமாக இப்போது இந்தச் செய்தி பரவிக்கொண்டிருக்கிறது.











