புத்துயிர் பெறும் லைகா – புதிய தலைமைச்செயல்அதிகாரி நியமனம்
ஈழத்தமிழர் சுபாஸ்கரனைத் தலைவராகக் கொண்ட திரைப்பட நிறுவனம் லைகா புரொடக்ஷன்ஸ். 2014 ஆம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் நுழைந்தது அந்நிறுவனம்.
அதன்பின் ரஜினிகாந்த்,கமல்ஹாசன் உள்ளிட்ட பெரிய கதாநாயகர்களை வைத்துப் படம் தயாரிக்கும் முன்னணி நிறுவனமாகத் திகழ்கிறது.
தற்போது இந்நிறுவனம், ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 மற்றும் மணிரத்னம் இயக்கத்தில் தயாராகும் பொன்னியின் செல்வன் ஆகியன உட்பட பல படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது.
இந்நிறுவனம் தமிழில் படங்களைத் தயாரிக்கத் தொடங்கியபோது, ஏற்கெனவே தமிழில் நிறையப் படங்களைத் தயாரித்த அனுபவமும் உலகெங்கும் தமிழ்த்திரைப்படங்களை விநியோகம் செய்த அனுபவமும் கொண்ட ஐங்கரன் கருணாமூர்த்தி லைகாவின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றிருந்தார்.
லைகா நிறுவனர் சுபாஸ்கரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நிர்வாகப் பொறுப்பில் இருந்து அவர் விலகிக் கொண்டார்.
அதன்பின் தயாரிப்பாளர் தமிழ்க்குமரன் மற்றும் கண்ணன் ஆகியோர் நிர்வாகப் பொறுப்பைக் கவனித்து வந்தனர்.
இந்நிலையில், மும்பையில் யஷ்ராஜ் பிலிம்ஸ், பாலாஜி டெலிபிலிம்ஸ் மற்றும் நெட் ஃப்ளிக்ஸ் ஆகிய முன்னணி நிறுவனங்களில் நிர்வாகப் பொறுப்பில் இருந்த ஆஷிஷ்சிங் என்பவரை லைகா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமித்திருக்கிறார்கள்.
லைகா நிறுவனம் தொடர்ந்து படங்களைத் தயாரிக்காது கைவசம் இருக்கிற படங்களோடு தயாரிப்பை நிறுத்திக் கொள்ளும் என்கிற பலரின் கணிப்பைப் பொய்யாக்கும் வண்ணம் இந்த நியமனம் நடந்துள்ளது என்கிறார்கள்.











