October 17, 2026
சினிமா செய்திகள்

சித்ரா மரணத்தில் நீடிக்கும் மர்மம் – மாமனார் கூறும் புதியதகவல்

பாண்டியன் ஸ்டோர்ஸ் நெடுந்தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சித்ரா டிசம்பர் 9 ஆம் தேதி அதிகாலை தற்கொலை செய்து கொண்டார். சித்ராவின் தற்கொலை அவரது குடும்பத்தினர் மட்டும் அல்லாமல் சின்னத் திரையைச் சேர்ந்தவர்கள் மற்றும் பொது மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது குறித்து பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். நடிகை சித்ராவுக்கு ஹேம்நாத் என்பவரோடு திருமண நிச்சயதார்த்தம் நடந்திருந்தது. சில மாதங்களுக்கு முன்பு சித்ராவுக்கும், ஹேம்நாத்க்கும் பதிவுத் திருமணம் நடந்தது.

இந்த நிலையில் சித்ராவின் மரணம் குறித்து இரு தரப்பினரையும் விசாரிக்க ஆர்.டி.ஓ. வுக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து விசாரணைக்காக நேற்று காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு சித்ராவின் பெற்றோர் மற்றும் கணவர் ஹேம்நாத் ஆகியோர் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நேற்று பகல் 12 மணிக்கு சித்ராவின் தந்தை காமராஜ், தாய் விஜயா, சித்ராவின் சகோதரி சரஸ்வதி, சகோதரர் சரவணன் ஆகியோர் ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு வந்தனர். ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ அவர்களிடம் தனித்தனியாக விசாரணை செய்தார். 12 மணிக்கு விசாரணை தொடங்கி 3 மணி நேரம் நடைபெற்றது.

சித்ராவைத் தற்கொலைக்குத் தூண்டியதாகச் சொல்லி நேற்றிரவு ஹேமநாத்தை கைது செய்தனர்.

இந்நிலையில், சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் இன்று சித்ராவின் கணவரான ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரன், தாய் வசந்தா ஆகியோரிடம் ஆர்.டி.ஓ விசாரணை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரவிச்சந்திரன், சித்ராவின் பெற்றோரிடம் தாங்கள் வரதட்சணை எதுவும் கேட்கவில்லை என்று கூறினார். ஹேம்நாத்தைக் கைது செய்ததை தாங்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை எனக் கூறிய ரவிச்சந்திரன், யாரையோ காப்பாற்றுவதற்காக ஹேம்நாத் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

இதனால் சித்ரா மரணத்தில் மர்மம் நீடிக்கிறது.

Related Posts