Uncategorized சினிமா செய்திகள்

தமிழ்த் திரையுலகுக்கு ஒன்றரை கோடி நிதி வழங்கினார் சூர்யா

சூர்யாவின் நடிப்பில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியிருக்கும் 2டி என்டர்டெயின்மென்டின் ‘சூரரைப் போற்று’ திரைப்படம்,நேரடியாக இணையம் வழியாக 2020 அக்டோபர் 30 ஆம் தேதி வெளியாகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

‘சூரரைப்போற்று’ திரைப்பட வெளியீட்டுத் தொகையிலிருந்து தேவையுள்ளவர்களுக்கு 5 கோடி ரூபாய் பகிர்ந்தளிக்கவிருப்பதாக சூர்யா அறிவித்திருந்தார்.

‘பொதுமக்களுக்கும் திரையுலகைச் சார்ந்தவர்களுக்கும் தன்னலம் பாராமல் போராட்டக் களத்தில் முன்னின்று பணியாற்றிய வர்களுக்கும் இந்த 5 கோடி ரூபாய் பகிர்ந்தளிக்கப்படும்’ என்று சூர்யா தெரிவித்திருந்தார். அதைச் செயல் படுத்தவும் தொடங்கியிருக்கிறார்.

முதல்கட்டமாக 1.5 கோடி ரூபாய் இன்று வழங்கப்பட்டது. இதில் திரையுலகத்தின் தொழிலாளர்கள் அமைப்பான ‘பெப்சி’ க்கு 1 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இத்தொகையை பெப்சியின் தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம், எண்பது இலட்ச ரூபாயும், பெப்சியின் அங்கமான இயக்குநர் சங்கத்தின் செயலாளர் இயக்குநர் ஆர்.வி.உதயகுமாரிடம் இருபது இலட்ச ரூபாயும் பிரித்து வழங்கப்பட்டது.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு 30 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. சங்கத்தின் சார்பில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அவர்கள் பெற்றுக்கொண்டு, அதை தயாரிப்பளர்கள் சங்கத் தனி அலுவலரிடம் வழங்குகிறார் என்று சொல்லப்பட்டுள்ளது.

தென்னித்திய நடிகர் சங்கத்திற்கு 20 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டடது. நடிகர் சங்கத்தலைவர் நாசர் பெற்றுக்கொண்டு அதை அவர், நடிகர் சங்கத் தனி அலுவலரிடம் வழங்குவார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இந்தத் தொகைகளுக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில், தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா தலைமையேற்க, நடிகர் சிவகுமார் முன்னிலை வகித்தார். சூர்யாவின் 2டி பட நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் ராஜ்சேகர் கற்பரபூரசுந்தரபாண்டியன் மற்றும் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் சுரேஷ்காமாட்சி லலித்குமார் ஆகியோர் பங்கேற்றார்கள்.

ஒன்றரை கோடி போக மீதமுள்ள மூன்றரை கோடி தொகையின் பகிர்ந்தளிப்பு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

Related Posts