லாக்கப் படச்சிக்கல் தீர்வு என்ன? தொழிலாளர்கள் குழப்பம்
மோகன் ராஜாவிடம் இணை இயக்குநராகப் பணிபுரிந்த எஸ்.ஜி.சார்லஸ் முதன்முறை இயக்கியுள்ள படம் லாக்கப். இந்தப் படத்தில் வைபவ், வாணி போஜன், ஈஸ்வரி ராவ், பூர்ணா, மைம் கோபி, வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
நிதின் சத்யா தயாரித்துள்ள இந்தப் படம் க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளது. இதில் முதன் முறையாக வெங்கட் பிரபு வில்லனாக நடித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால் இப்படம் நேரடியாக இணையதளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தப்படத்தை சுமார் மூன்றரை கோடி ரூபாய் கொடுத்து இணையநிறுவனம் வாங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
படத்துக்கு ஆன செலவைக் காட்டிலும் அதிக விலை கிடைத்ததால் இப்படம் வெளியாகுமுன்பே இலாபம் சம்பாதித்திருக்கிறது என்கிறார்கள்.
ஆனாலும், படத்தில் பணியாற்றிய பலருக்கு இன்னும் சம்பளம் முழுமையாகக் கொடுக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.
திரையரங்குகளில் படம் வெளியாகிறதென்றால், சம்பள பாக்கிக்காக லேப் லெட்டர் என்கிற முறை இருக்கிறது.பணம் வராதவர்கள் புகாரளித்தால் படம் வெளியாவது சிக்கலாகும்.
இந்தப்படம் இணையத்தில் வெளியாகிறது. இதனால் சம்பளப்பாக்கி உள்ளவர்கள் ஃபெப்சியில் புகார் அளித்தால் தீர்வு ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.











