ஊரடங்கு காலத்தில் படப்பிடிப்பு – சுசீந்திரன் படத்தில் சர்ச்சை
கென்னடி கிளப் படத்துக்குப் பிறகு, சுசீந்திரன் இயக்கும் படத்தில் ஜெய் நாயகனாக நடிக்கிறார். அவருடன் முக்கியக் கதாபாத்திரத்தில் பாரதிராஜா நடிக்கவுள்ளார். இந்தப் படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யவுள்ளார் என்று செய்திகள் வந்தன.
இப்படம் கொரோனா ஊரடங்கு முடிந்தவுடன் திடங்கும் என்றும் செய்திகள் வந்தன.
ஆனால், யாரும் நம்பமுடியாவண்ணம் கொரோனா ஊரடங்குக் காலத்திலேயே மொத்தப் படப்பிடிப்பையும் முடித்துவிட்டார் என்று சொல்லப்படுகிறது.
தன் சொந்த ஊர்ப் பகுதிகளில் மிகக் குறைவான ஊழியர்களைக் கொண்டு படப்பிடிப்பை நடத்தி முடித்துவிட்டார் என்று சொல்கிறார்கள்.
படப்பிடிப்புகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த நேரத்தில் இவர் மட்டும் எப்படி படப்பிடிப்பு நடத்தினார்? என்றால், தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் இணையதளத் தொடர்களுக்கு படப்பிடிப்பு நடத்த அரசு அனுமதி கொடுத்ததைப் பயன்படுத்தி இவர் படப்பிடிப்பை முடித்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
குறைந்த நாட்களில் குறைந்த செலவில் படமெடுப்பது எப்படி? என்று வகுப்பெடுக்குமளவுக்கு சுசீந்திரன் சிறப்பாகச் செயல்பட்டு இந்தப்படத்தை முடித்துவிட்டார் என்று பாராட்டுகிறார்கள்.
அதேநேரம், அரசாங்கம், திரைப்படத் தொழிலாளர்கள் அமைப்பு ஆகியனவற்றை ஏமாற்றி இவர் மட்டும் படப்பிடிப்பு நடத்தியது எப்படி? என்கிற சர்ச்சையும் உருவாகியிருக்கிறது.









