ஏழுகடல் ஏழுமலை – திரைப்பட விமர்சனம்
முன்னூறு வருசத்துக்கு முன்னாடி ஏழுமலைக்கு அந்தப்பக்கம் ஒரு மலை,அங்க ஒரு மரக்கிளையில ஒரு பரண்,அதுல ஒருத்தன் தூங்கறான்,20 வருசத்துக்கு முன்னாடி ஏழுகடலுக்கு அந்தப்பக்கம் ஒரு கடல்,அங்க ஒருத்தன் தூங்கிகிட்டு இருக்கான்,இப்ப இந்த இரயிலின் கடைசிப்பெட்டில ஒருத்தன் தூங்கிட்டிருக்கான்.
இதுல என்ன ஸ்பெஷல்?
அந்த மூணு பேரும் ஒருத்தன்தான் என்பதுதான் ஸ்பெஷல்.
பல்லாயிரம் ஆண்டுகள் வாழும் ஒரு மனிதனுக்கும் தற்கால அவசர உலகில்,தன்னல உலகில் வாழும் ஒருவனுக்கும் நடக்கும் உரையாடல் மூலம் பல்வேறு உயரிய கருத்துகளை,நற்கருத்துகளை,சுவையான கருத்துகளைப் பகிர்ந்திருக்கும் படம் ஏழுகடல் ஏழுமலை.
பல்லாயிரம் ஆண்டுகளாக வாழும் மனிதர் கதாபாத்திரத்தில் நிவின்பாலி நடித்திருக்கிறார்.புறத்தில் மட்டுமின்றி அகத்திலும் அந்தக் கதாபாத்திரத்தை உள்வாங்கி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.அஞ்சலியுடனான காதல்காட்சிகளிலும் சூரியுடனான மோதல் காட்சிகளிலும் தன்னுடைய தனித்துவத்தை நிறுவியிருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் அஞ்சலி,நிவின்பாலி போலவே பல்வேறு காலகட்டங்களில் வாழும் மனிதியாக வருகிறார்.அதற்கேற்ப பொருத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
நிவின்பாலியின் சகபயணியாக வரும் சூரி,நம்மைத் தவிர மற்ற எல்லோருமே மற்றும் எல்லாமே சாதாரணம் எனும் தற்காலகட்டத்தின் பிரதிநிதியாக இருக்கிறார்.அங்கங்கே சிரிக்க வைக்கிறார்.பல இடங்களில் இரசிக்க வைக்கிறார்.
ஒளிப்பதிவாளர் என்.கே.ஏகாம்பரம்,படத்தின் தூணாக இருக்கிறார்.இயக்குநரின் எண்ணத்தை சற்றும் குறையாமல் வெளிப்படுத்திவிட வேண்டுமென்கிற தவிப்புடன் அவருடைய காட்சிப்படுத்தல்கள் அமைந்திருக்கின்றன.
இசையமைப்பாளர் யுவன்ஷங்கராஜா, கூடுதல் இசை கொடுத்திருக்கும் சந்தோஷ் தயாநிதி ஆகியோர்,இசைமூலமும் இந்தக்கதையைச் சொல்லியாக வேண்டுமென உணர்ந்து பணியாற்றியிருக்கிறார்கள்.அது படத்துக்குப் பெரும்பலமாக அமைந்திருக்கிறது.
ஸ்டண்ட் சில்வா,அந்தந்த கதாபாத்திரங்களுக்கு ஏற்ப சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.
படத்தொகுப்பாளர் வி.எஸ்.மதிக்கு மிகவும் சவாலான திரைக்கதை.அதை தொய்வின்றி கொடுத்துவிட வேண்டும் என்று முயன்றிருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கிறார் ராம்.
உலகம் மாந்தர்களுக்கானது மட்டுமன்று உயிர்களுக்கானது என்கிற கருத்தை உரத்துச் சொல்லியிருக்கிறார்.அதைச் சொல்வதற்காக அவர் எடுத்துக் கொண்ட கதைக்களம்,வடிவமைத்திருக்கும் கதாபாத்திரங்கள் ஆகியன வியப்பூட்டுகின்றன.
திரைக்கலை என்பது காட்சி ஊடகம் என்பதால் சொல்லவேண்டியதை காட்சிகளாகக் காட்டவேண்டும் என்பது அடிப்படை.இந்தப்படத்தில் அதையும் தாண்டி,காட்டப்படுகிற காட்சிகளை பேசப்படுகிற வசனங்களை எல்லாம் அப்படியே எடுத்துக்கொள்ளாமல் அவரவர் சிந்தைக்கேற்ப விரித்துக்கொள்ளலாம் என்கிற பெருவெளியை ஏற்படுத்தியிருக்கிறார் ராம்.
பார்க்கின்ற நேரத்தில் படத்தில் தெரியும் குறைகள் எல்லாம் அவருடைய உயரிய எண்ணங்களை எண்ணும்போது மறைந்துவிடுகின்றன.
– கதிரோன்











