விக்ரம்பிரபு கவுதம்கார்த்திக் மோதல் – காரணம் என்ன?
முத்தையா இயக்கத்தில் ஆர்யா கதாநாயகனாக நடித்த காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம் படம் ஜூன் மாதம் வெளியானது. அதற்கடுத்து முத்தையா இயக்கும் படம் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.
அந்தப் படத்தைத் தொடர்ந்து அருண்விஜய்யைக் கதாநாயகனாக வைத்து ஒரு படம் எடுக்கும் திட்டத்தில் இருக்கிறார். அந்தப்படத்தின் மொத்தச் செலவு அதிகம் என்பதால் தொடங்கவியலாமல் இருக்கிறதாம்.அந்தக்கதை அப்படி என்கிறார்கள். அதனால் அதற்கேற்ற தயாரிப்பாளரைத் தேடும் வேலைகள் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்கிறது.
இன்னொரு பக்கம், அதற்கு முன்பாக ஒரு படத்தை இயக்கிவிடும் முயற்சியில் முத்தையா இறங்கியிருக்கிறாராம்.
அப்படத்தில் கவுதம்கார்த்திக், விக்ரம்பிரபு ஆகிய இருவரையும் நாயகர்களாக நடிக்க வைக்கத்திட்டமிட்டாராம்.
மணிரத்னம் இயக்கத்தில் 1988 ஆம் ஆண்டு வெளியான படம் அக்னிநட்சத்திரம். அப்படத்தில் கவுதம்கார்த்திக்கின் அப்பா கார்த்திக்கும் விக்ரம்பிரபுவின் அப்பா பிரபுவும் இணைந்து நடித்திருந்தார்கள். அப்படம் பெரிய வெற்றி.
அந்தப்படத்தின் அடுத்த பாகம் போல் இருக்கிற மாதிரியான கதையை உருவாக்கியிருக்கிறாராம் முத்தையா.அதனால் கவுதம்கார்த்திக் விக்ரம்பிரபு ஆகியோரை நடிக்க வைக்கத் திட்டமிட்டுள்ளார்.
இதற்கு விக்ரம்பிரபு சம்மதம் சொல்லிவிட்டதாகத் தெரிகிறது. ஆனால் கவுதம்கார்த்திக் ஒப்புக்கொள்ளவில்லையாம்.
ஏன்?
கவுதம் கார்த்திக் நடித்த தேவராட்டம் படத்தை முத்தையா இயக்கியிருந்தார். அந்தப்படம் 2019 ஆம் ஆண்டு வெளியானது.
அதற்குப் பின் முத்தையா இயக்கியபடம் புலிக்குத்திப்பாண்டி. அந்தப்படத்தில் நடிக்க முதலில் கவுதம்கார்த்திக்கைக் கேட்டிருக்கிறார் முத்தையா. அவரும் சம்மதம் சொன்னாராம்.அதன்பின் கவுதம்கார்த்திக்கிடம் சொல்லாமலே விக்ரம்பிரபுவை நாயகனாக்கி அந்தப்படத்தை எடுத்துவிட்டார் முத்தையா. இதனால் கவுதம்கார்த்திக் மனவருத்தத்தில் இருந்திருக்கிறார்.
இதனால்தான், இப்போது முத்தையா கேட்டும் கவுதம்கார்த்திக் மறுத்ததாகச் சொல்லப்படுகிறது.
இன்னொருபக்கம் இது முதல்முறையல்ல, ஏற்கெனவே ஒருமுறை விக்ரம்பிரபுவோடு இணைந்து நடிக்க கவுதம்கார்த்திக் மறுப்புத் தெரிவித்தார் என்கிறார்கள்.
2020 ஆம் ஆண்டு வெளியான படம் வானம் கொட்டட்டும்.அதில் விக்ரம்பிரபு கதாநாயகனாக நடித்திருந்தார். அந்தப்படத்தைத் தயாரித்தது மணிரத்னம். இதனால் அந்தப்படத்தை அக்னிநட்சத்திரம் 2 என்பதுபோல் எடுக்கத் திட்டமிட்டு கவுதம்கார்த்திக்கை அணுகியிருக்கிறார்கள். அப்போதும் மறுத்துவிட்டாராம் கவுதம்கார்த்திக்.
அதனால், அண்ணன் தம்பி என்பதற்குப் பதிலாக அண்ணன் தங்கை என்று கதையையே மாற்றி ஐஸ்வர்யாராஜேசை நடிக்க வைத்தார்களாம்.
இப்போது முத்தையா அக்னிநட்சத்திரம் 2 போல் செய்யலாம் என்றதற்கும் மறுப்பு தெரிவித்திருக்கிறார் என்பதால் விக்ரம்பிரபு மேல் கவுதம்கார்த்திக்குக்கு என்ன கோபம்? என்பதுதான் இந்தச் செய்தியறிந்தவர்களின் ஆராய்ச்சி.
ஆனந்த விகடன் (25.09.2013) ஏட்டில் விக்ரம்பிரபு நேர்காணல் வந்திருந்தது. அதில்,
கார்த்திக் பையன் கெளதமும் நீங்களும் “அக்னி நட்சத்திரம்” இரண்டாம் பாகத்தில் நடிக்கப்போறதா வந்த செய்தி உண்மையா?”
விக்ரம் பிரபு:
அதெல்லாம் வதந்தி. “அக்னி நட்சத்திரம்” எல்லாம் க்ளாஸிக் மூவி. அதை தொடுறதுக்கு முன்னாடி ரொம்ப யோசிக்கணும். அந்தப் படம் அப்போ ஹிட்டாக ஆயிரம் காரணங்கள் இருந்திருக்கும். அதன் இரண்டாம் பாகம்கிறதுக்காகவே ஒரு படம் இப்போ ஜெயிக்கும்னு சொல்ல முடியாது. இதே மாதிரிதான் அப்பாவோட ‘சின்ன தம்பி’ ரீமேக்ல நடிப்பீங்களானு கேட்கிறாங்க. அந்தப் பட ரேஞ்ச்சே வேற. அந்தப் படத்தின் ரீமேக் பத்தி யோசிக்கவே முடியாது!
என்று சொல்லியிருந்தார்.
இதுதான் காரணமாக இருக்குமோ?











